புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பாஜக திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான (எஸ்.டி) வேட்பாளராக திரிபுராவின் கடைசி மன்னரான மகாராஜா கிரித் பிக்ரம் கிஷோர் மாணிக்ய தெப்பர்மாவின் இளைய மகளும், திப்ரா மோதா கட்சியின் நிறுவனர் பிரத்யோத் கிஷோர் தெப்பர்மாவின் மூத்த சகோதரியுமான ‘இளவரசி’ கிருத்தி சிங் டெபர்மாவை பாஜக களமிறக்கியுள்ளது. இதனால் அந்தத் தொகுதியில் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலராக அறியப்படும் இவர் குறித்த பின்புலம் பார்ப்போம்.
திப்ரா மோதா கட்சி: திரிபுராவில் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. திரிபுராவின் வரலாற்றில் பழங்குடியின அரசியல் எப்போதும் முக்கியமானதுதான். பழங்குடி மக்களிடம் திப்ரா மோதா கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.
திரிபுராவில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட திப்ரா மோதா கட்சி, இந்திய அளவில் மக்களை ஈர்த்தது. 13 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்து முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது. திப்ரா மோதா கட்சியை கடந்த 2019-ம் ஆண்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரச்யோத் பிக்ராம் மணிக்யா டெப் பர்மா (Pradyot Bikram Manikya Deb Barma) தொடங்கினார்.
இவரின் தந்தை கிரித் பிக்ரம் டெப் பர்மா மூன்று முறை எம்பியாகவும், அவரின் தாயார் பிபு குமாரி இரண்டு முறை காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருந்தவர். தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தேர்தல் என எந்த தேர்தலிலும் பிரத்யோத் போட்டியிடவில்லை என்றாலும், திரிபுராவின் திப்ரா மக்களுக்கான போராட்டங்களில் அவர் தீவிரம் காட்டிவந்தார்.
» திரிபுராவின் திரிப்தா மோத்தா அமைப்புடன் முத்தரப்பு ஒப்பந்தம் - அமித் ஷா முன்னிலையில் கையெழுத்து
» புற்றுநோயோடு போராடி திரிபுரா அழகி ரிங்கி சக்மா 28 வயதில் உயிரிழப்பு
இவர் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். அதைத் தொடர்ந்து, திரிபுரா பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காங்கிரஸ் தலைமை நியமித்தது. ஆனால், சில மாதங்களிலேயே, ஊழல்வாதிகளுக்கு இடமளிக்க காங்கிரஸ் தலைமை குடைச்சல் கொடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.
அதன்பின்னர் 2019-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார் பிரத்யோத். காங்கிரஸில் இருந்து வெளியேறிய பிரத்யோத், டெப் பர்மா பெயரில் சமூக அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றவும் முடிவுசெய்தார். பின்னர் திப்ரலாந்து எனும் தனி மாநிலக் கோரிக்கையுடன் தனது அமைப்பை திப்ரா மோதா என்ற அரசியல் கட்சியாக மாற்றிவிட்டதாக அறிவித்தார். 2019-ல் தொடங்கப்பட்ட கட்சியாக இருந்தாலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணிக்கு திப்ரா மோதா கட்சி கடுமையான போட்டியைக் ஏற்படுத்தியிருந்தது கவனிக்கப்படுகிறது.
திரிபுரா மாநிலத்தில் நீண்ட காலமாக நீடித்து வரும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், மத்திய அரசு மற்றும் திரிபுரா அரசுடன், திப்ரா மோதா கட்சி ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதோடு சில தினங்களுக்கு முன்பு திப்ரா மோதா கட்சி, பாஜகவுடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த இளவரசி’ கிருத்தி சிங் டெபர்மா? - கிருத்தி சிங் டெபர்மா ( Kriti Singh Debbarma) ஷில்லாங்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். அனிமல் லவ்வரான அவர், விலங்குகள் நல ஆர்வலராகவும் இருக்கிறார். அவர் கவர்தாவில் ஒரு பெரிய ‘கோ சாலை’ நடத்தி வருகிறார், அதில் வயதான மற்றும் கைவிடப்பட்ட கால்நடைகளுக்கு தங்குமிடம் உள்ளது.
அதோடு தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கான தங்குமிடமும் அமைத்து கொடுத்து, அதனை பராமரித்து வருகிறார். விலங்குகள் நலனுக்கான அயராது உழைத்து வரும் அவர், எந்தவொரு தோல் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. அவரது காலணிகள்கூட துணிகளால் செய்யப்பட்டவை எனச் சொல்லப்படுகிறது. அவர் சத்தீஸ்கரில் உள்ள கவர்தா ராஜ் அரச குடும்பத்தின் அரச வாரிசான யோகேஷ்வர் ராஜ் சிங்கை மணந்தார்.
இது குறித்து அவர் ஒரு தனியார் ஊடகத்திடம் கூரும்போது, “எம்.பி.யாக நான் என்ன சாதிக்க வேண்டும் என்பதில் என் தெளிவாக இருக்கிறேன். எனது தொகுதியின் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன். இன்னும் நிறைய வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது. இயற்கை விவசாயம், மழைநீர் சேகரிப்பு, உள்நாட்டு பயிர்கள் மற்றும் தோட்டக்கலைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றில் எனது ஆழமான அனுபவம் திரிபுராவுக்கு பயனளிக்கும்” என்றார்.
திப்ரா மோதா கட்சியை கடந்த 2019-ம் ஆண்டு உருவாக்கிய அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரச்யோத் பிக்ராம் மணிக்யா டெப் பர்மாவின் மூத்த சகோதரிதான் இந்த ‘இளவரசி’ கிருத்தி சிங் டெபர்மா. இவர் அரசியலுக்கு புதிதாக இருந்தாலும், அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கிறார். கிருத்தி சிங் டெபர்மா குடும்பத்தின் செல்வாக்கு, புகழ், அரசியல் நுணுக்கங்கள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தர உதவுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முந்தைய பகுதி: ராஜஸ்தானின் பாஜக களப் போராளி... யார் இந்த இந்து தேவி ஜாதவ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago