காங்கிரஸ் ஆட்சியில் கச்சத்தீவை பிரதமர் இந்திரா காந்தி தாரை வார்த்தபோது திமுகவுக்கு நன்றாகவே தெரியும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கச்சத்தீவை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1974-ல் இலங்கைக்கு தாரை வார்த்தபோது திமுகவுக்கு நன்றாகவே தெரியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் கச்சத்தீவு உள்ளது. இதன் பரப்பளவு285 ஏக்கர். கடந்த 1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி,கச்சத்தீவை இலங்கையின் பகுதியாக அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த சூழலில் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ்பெறப்பட்ட தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று கூறியதாவது:

இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, ‘கச்சத்தீவின் கடல் பகுதியில் இரு நாடுகளுக்கும் இறையாண்மை உள்ளது. கச்சத்தீவு பகுதியை இந்தியமீனவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு நாடுகளின் படகுகளும் கச்சத்தீவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இன்றி செல்லலாம்’ என்ற 3 நிபந்தனைகள் அதில் இடம்பெற்றன.

தற்போது கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த முக்கிய தகவல்கள் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளன.

குறிப்பாக, கச்சத்தீவு தொடர்பாக கடந்த 1968-ல் வெளியுறவு துறைகமிட்டி அளித்த அறிக்கை, 1974 ஜூன் 19-ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் (கருணாநிதி) - அன்றைய வெளியுறவு செயலர் இடையே நடந்த கலந்துரையாடல் குறித்த ஆவணம் ஆகியவை ஆர்டிஐமூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இப்பிரச்சினை மிக நீண்டகாலமாக மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார்? இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? ஒப்பந்தம் குறித்த உண்மைகளை மறைத்தது யார்என தற்போது ஆர்டிஐ மூலம் மக்களுக்கு தெரிந்துள்ளது.

கடந்த 1961-ல் அப்போதைய பிரதமர் நேரு, ‘‘மிகச் சிறிய கச்சத் தீவுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த தீவை விட்டுக்கொடுப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நாடாளுமன்றத்தில்இந்த பிரச்சினையை திரும்ப திரும்பஎழுப்ப கூடாது'’ என்றார்.

நேருவும், இந்திரா காந்தியும் கச்சத்தீவை ஒரு தொல்லையாகவே பார்த்தனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய இந்திரா காந்தி, ‘‘கச்சத்தீவு மிகச்சிறிய பாறை’' என்றார். 1974-ல் அவர்தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்.

நாடாளுமன்றத்தில் பேசியஅப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், “இந்த ஒப்பந்தம்மூலம் கச்சத்தீவில் இரு நாடுகளின்மீனவர்களும் மீன்பிடித்தல், புனித பயணம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட உரிமைகளை பெறலாம்’’ என்று விளக்கம் அளித்தார். ஆனால்,அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய மீனவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இலங்கை சிறப்பு பொருளாதாரமண்டலமாக கச்சத்தீவு அறிவிக்கப்பட்டது. அங்கு இந்திய மீன்பிடி படகுகள், இந்திய மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் 6,184 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 1,175 இந்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு, மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து காங்கிரஸும், திமுகவும் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பின. சென்னையில் இருந்துகொண்டு மக்களை திசை திருப்பும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இப்போது கச்சத்தீவு பிரச்சினைக்கு உண்மையிலேயே யார் காரணம் என்பது மக்களுக்கு புரிந்துவிட்டது.

இப்பிரச்சினை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எனக்கு பலமுறை கடிதம் எழுதி உள்ளார். அவருக்கு 21 முறை உரிய பதில் அளித்திருக்கிறேன்.

கச்சத்தீவு பிரச்சினைக்கு காங்கிரஸும், திமுகவுமே காரணம். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எல்லாமே தெரியும்.ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் அவருக்கு தெரியும். ஆனால்,திமுகவும், காங்கிரஸும் மக்களைதிசைதிருப்பி நாடாளுமன்றத்தில்பிரச்சினை எழுப்புகின்றன. எல்லைகளை பாதுகாப்பதில் காங்கிரஸுக்கு துளியும் அக்கறை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE