கேஜ்ரிவால் கைது காங்கிரஸுக்கு ஒரு பாடம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: டெல்லி ராம்லீலா மைதானத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இண்டியா கூட்டணியின் பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கோழிக் கோட்டில் செய்தியாளர்களிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

இண்டியா கூட்டணியின் பேரணி பாஜக அரசுக்கு வலுவான எச்சரிகை விடுத்துள்ளது. மக்களவை தேர்தல் முடிவில் இந்த பேரணி நிச்சயம் பெரிதாக தாக்கம் செலுத்தும். அதேநேரத்தில், காங்கிரஸும் இதிலிருந்து பாடம் கற்கவேண்டும். ஏனெனில், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பாஜக தாக்குதல் நடத்திய போதெல்லாம் காங்கிரஸ் பாஜகவுடன் நின்றது.

டெல்லி அரசில் நடந்ததாகக் கூறப்படும் மதுபான ஊழல் குறித்து காவல் துறையில் முதன்முதலில் புகார் அளித்தது காங்கிரஸ் கட்சிதான். அமலாக்கத் துறை அதை பயன்படுத்திக் கொண்டது. டெல்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, கேஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது காங்கிரஸ். அவர் கைது செய்யப்படும்வரை காங்கிரஸ் இதை செய்து வந்தது. தற்போது தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் மாற்றியுள்ளது.

சிறை செல்ல நேரிடும் என மிரட்டியதன் காரணமாகவே பலகாங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்ததாக ராகுல் கூறிஇருக்கிறார். அரசியலில் பலஇன்னல்கள் இருக்கும். ஆனால், அரசியலை கைவிடுவது அதற்கு தீர்வாகாது. நாட்டின் ஒட்டுமொத்த நலன் கருதி காங்கிரஸ் அத்தகைய நிலைப்பாட்டை ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE