ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்: திஹார் சிறையில் அடைக்கப்பட்டார் கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மனை 8 முறை நிராகரித்து நேரில் ஆஜராக மறுத்து வந்தார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால். இந்நிலையில் கேஜ்ரிவால் வீட்டுக்குச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 21-ம் தேதி நடத்திய சோதனைக்கு பின்னர் அவரை கைது செய்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், தங்களது காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு, அமலாக்கத் துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 15-ம் தேதி வரை அர்விந்த் கேஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் சிறை எண் 2-ல் தனியாக அடைக்கப்பட்டார்.

ஏற்கெனவே கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகள்கவிதா ஆகியோரும் திஹார் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறை எண் 2-ல் அடைக்கப்பட் டிருந்த சஞ்சய் சிங் சில நாட் களுக்கு முன்னர்தான் சிறை எண் 5-க்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிறை எண் 2-ல் அர்விந்த் கேஜ்ரிவால் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்.

ராமாயணம், பகவத் கீதை: மேலும் சிறையில் அவருக்குப் படிக்க ராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதை, பத்திரிகையாளர் நீரஜா சவுத்ரி எழுதிய `ஹவ் பிரைம் மினிஸ்டர்ஸ் டிசைட்' ஆகிய புத்தகங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE