ராகுல் காந்தியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை "மேட்ச் பிக்ஸிங்" என கூறிய ராகுல் காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.

இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று (மார்ச் 31) நடந்த பேரணியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, "தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்' என்கின்றனர்.

இப்போது மக்களவை தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்'கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இண்டியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்'தான்.

இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்கவும் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது. நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது. ‘மேட்ச் பிக்ஸிங்' இல்லாமல் இது சாத்தியமாகாது. அந்த கட்சியால் 180 தொகுதிக்கு மேல் பெற முடியாது" என்றார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண்குமார் அடங்கிய பிரதிநிதிகள் குழு தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளித்தனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்தீப் சிங் புரி, "நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இது (மக்களவைத் தேர்தல்) ‘மேட்ச் பிக்ஸிங்' என்றும், மத்திய அரசு தனது ஆட்களை தேர்தல் ஆணையத்தில் நிறுத்தியுள்ளது என்றும் கூறி இருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தலுக்குப் பிறகு அரசியல் சாசனம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கள் "மிகவும் ஆட்சேபனைக்குரியவை". அவை மாதிரி நடத்தை விதிகளை மீறுவது மட்டுமல்ல, கடுமையான தாக்கங்களையும் ஏற்படுத்தக்கூடியவை. எனவே, ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினோம்.

ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் இதுபோன்ற கருத்துக்களைக் கூறி வருகிறார். இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதை நிறுத்த மாட்டார் என்பதால், மக்களவைத் தேர்தலின் போது அவர் பேசுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்