மோடியின் ‘மேட்ச் பிக்ஸிங்’ - ராகுல் காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் நேற்று இண்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அந்த கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், அவரது மகன் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ்பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த்சோரனின் மனைவி கல்பனா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரைன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இண்டியா கூட்டணியின் அனைத்து தலைவர்களும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கேஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் சிறையில் இருந்தாலும் மனதளவில் நம்மோடுதான் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்'என்கின்றனர்.

இப்போது மக்களவை தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்'கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இண்டியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்'தான்.

இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்கவும் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது. நாடு முழுவதும் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது. அந்த கட்சியால் 180 தொகுதிக்கு மேல் பெற முடியாது. இவ்வாறு ராகுல் பேசினார்.

தலைவர்கள் சரமாரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை நாங்கள் முன்னிறுத்துகிறோம். இன்றைய பொதுக்கூட்டம் அதற்குஉதாரணம். வரும் மக்களவை தேர்தலில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே போர் நடக்கிறது. இதில் சர்வாதிகாரம் தோற்கடிக்கப்படும்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்: டெல்லி, ஜார்க்கண்ட் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சர்வாதிகார அரசுக்கு மக்களே நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய கூடாது என்று பாஜக சதி செய்கிறது. அந்த சதியை முறியடித்து இண்டியா கூட்டணி தலைவர்கள்ஒன்றுசேர்ந்துள்ளனர். முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்துவிட்டதாக பாஜக பெருமிதம் கொள்கிறது. அவரை கைது செய்ததன் மூலம் புதிதாக லட்சக்கணக்கான கேஜ்ரிவால்கள் உருவாகி உள்ளனர். இந்த நாடு ஒருவரின் சொத்துகிடையாது. 140 கோடி இந்தியர்களின் சொத்து.

சிவசேனா (உத்தவ் பிரிவு)தலைவர் உத்தவ் தாக்கரே: சுனிதாவும் கல்பனாவும் எங்கள் தங்கைகள். சர்வாதிகார அரசுக்கு எதிராகஅவர்கள் போராடுகின்றனர். அவர்களின் பின்னால் அண்ணன்களாக நாங்கள் அணிதிரண்டிருக்கிறோம்.

பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்: வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வறுமை நாட்டின் மிகப்பெரிய எதிரிகளாக உருவெடுத்துள்ளன. விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களை சந்திக்க பிரதமர் மோடிக்கு நேரமில்லை. ஆனால், நடிகை பிரியங்கா சோப்ராவை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பாஜக கூறுகிறது. அவ்வளவு தன்னம்பிக்கை இருக்கும்போது கேஜ்ரிவாலை பார்த்து எதற்கு அஞ்ச வேண்டும். அவரை ஏன் கைது செய்ய வேண்டும். ஒரு காலத்தில் இந்திய ஜனநாயகத்தை உலக நாடுகள் வியந்து போற்றின. தற்போது ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன்: பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக ஹேமந்த் சோரன் பாடுபட்டார். இதன்காரணமாகவே மத்தியில் ஆளும் சர்வாதிகார பாஜக அரசுஅவரை சிறையில் அடைத்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் ஜார்க்கண்ட் மக்கள், பாஜகவுக்கு தகுந்த பதில் அளிப்பார்கள். இவ்வாறு அவர்கள் பேசினர்.

சட்டவிரோத பண பரிமாற்றம், நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்தஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. அவரது மனைவி கல்பனா சோரன் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “ஜனநாயகத்தை அழிக்க சர்வாதிகார சக்திகள் முயற்சி செய்கின்றன. வரும் மக்களவை தேர்தலில் சர்வாதிகாரத்துக்கு மக்கள் தகுந்த பதில்அளிக்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்