பிரஃபுல் படேலை சலவை செய்த ‘பாஜக வாஷிங் மெஷின்’ - திரிணமூல் காங். ‘டெமோ’வுடன் கேலி

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை வாஷிங் மெஷின் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை தவறாக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர்கள் பாஜகவின் தாமரைச் சின்னம் ஒட்டப்பட்ட வாஷிங் மெஷினை காட்சிப்படுத்தினர். இத்துடன், பாஜகவை குறிவைத்து ‘வாஷிங் பவுடர் பஜ்பா’ என்ற வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், குற்ற வழக்குகளை சந்தித்த தலைவர்கள் பாஜகவுக்கு வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் பாஜகவில் இணைந்ததும் அவர்கள் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு அவர்கள் தூய்மையானவர்களாக மாற்றப்படுகிறார்கள். மேலும், பாஜகவில் இணைந்தவர்கள் அனைவரின் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அஜித் பவார் தலைமையிலான என்சிபி பிரமுகர் பிரஃபுல் படல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்பியான ரிதப்ரதா பானர்ஜி கூறுகையில், "ஏர் இந்தியா ஒப்பந்தத்தின்போது பண முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்பட்ட அதே பிரஃபுல் படேல், என்டிஏ கூட்டணியி்ல் இணைந்த பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். முன்பு இந்த தலைவர்களை துஷ்பிரயோகம் செய்த பாஜக, கட்சியில் இணைந்ததும் அவர்களை நண்பர்கள் என்று கொண்டாடுகின்றனர். பாஜகவில் இணையாத தலைவர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போல கைது செய்யப்படுகிறார்கள்.

ஊழல் கரைபடிந்த தலைவர்களை சுத்தப்படுத்தும் சலவை எந்திரங்களாக செயல்படும் முதுகெலும்பற்ற மத்திய விசாரணை அமைப்புகளின் வெட்கமற்ற வாஷிங் மெஷின் அரசியலை திரிணமூல் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை முடித்துவைக்கும்போது சிபிஐ "தவறு நடந்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்திருந்தது. ஏர் இந்தியாவுக்காக விமானங்களை குத்தகைக்கு எடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்ட குற்றசாட்டிற்காக கடந்த 2017-ம் ஆண்டு பிரஃபுல் படேல் மீது வழக்கு பதியப்பட்டது.

முன்னதாக, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருந்து கிளர்ச்சி செய்து பிரிந்து வந்து பாஜகவுடன் இணைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பவார் தலைமையிலான என்சிபி அணி, பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE