ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை ம.பி.யில் கல்லூரி மாணவருக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

குவாலியர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒரு தனது வங்கிக் கணக்கில் நடந்திருக்கும் பணப் பரிவர்த்தனையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.46 கோடி பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பிரமோத் குமார் தண்டோடியா (25) என்ற அந்த மாணவர் குவாலியரில் வசித்து வருகிறார். மும்பை மற்றும் டெல்லியில் இருந்து இயங்கி வந்த நிறுவனம் ஒன்று தனது பான் கார்டு எண்ணைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்திருப்பதாக வருமான வரித் துறை மற்றும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்ததைத் தொடர்ந்து இந்த விஷயம் தனக்கு தெரிய வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரமோத் தண்டோடியா விளக்கம்: இந்தச் சம்பவம் குறித்து பிரமோத் குமார் கூறுகையில், “நான் குவாலியரில் வசிக்கும் கல்லூரி மாணவர். வருமான வரித் துறை மற்றும் ஜிஎஸ்டியிடமிருந்து வந்த நோட்டீஸ் மூலம், கடந்த 2021-லிருந்து மும்பை மற்றும் டெல்லியில் இருந்து இயங்கி வரும் நிறுவனம் ஒன்று எனது பான் எண்ணைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்துள்ளதாகத் தெரியவந்தது. இந்தப் பணப் பரிமாற்றங்கள் எவ்வாறு நடந்தது, எனது பான் கார்டு எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியாது.

வருமான வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வந்ததைத் தொடர்ந்து நான் பல முறை போலீஸில் புகார் செய்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை கூடுதல் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகாரளித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷியாஸ் கே.எம். கூறுகையில், “இன்று இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.46 கோடி பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதுகுறித்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இளைஞரது பான் கார்டு எண் மூலம் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு இந்த அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த விஷயம் குறித்தும் விசாரணை நடந்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE