புதுடெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் இருவரும் கலந்துரையாடிய வீடியோநேற்று வெளியிடப்பட்டது.
பில்கேட்ஸ்: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக உள்ளது. எந்தெந்த துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது?
பிரதமர் மோடி: சுகாதாரம், விவசாயம், கல்வித் துறைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். மருத்துவத் துறையில் டெலி மெடிசின் திட்டத்தின் மூலம் குக்கிராமங்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது.
கல்வித் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மாணவ, மாணவியரின் கற்றல் ஆர்வத்தை தூண்டுகிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் வேளாண் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
பில்கேட்ஸ்: இந்தியாவின் குக்கிராமங்களுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு சென்றது எப்படி?
பிரதமர் மோடி: தொழில்நுட்பத்தில் நகரங்கள், கிராமங்களுக்கு இடையில்இடைவெளி இருக்கக் கூடாது.இதன் ஒரு பகுதியாக விவசாய பணிக்கு பயன்படுத்தும் ட்ரோன்களை இயக்க கிராம பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பில்கேட்ஸ்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரப் பிரசாதமாக அமைந்திருக்கிறது. அதேநேரம் இந்ததொழில்நுட்பத்தால் பல்வேறு சவால்களும் எழுந்துள்ளன. இதை இந்தியா எவ்வாறு எதிர்கொள்கிறது?
பிரதமர் மோடி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. டீப் பேக் புகைப்படம், ஆடியோ, வீடியோவால் பெரும்பிரச்சினைகள் எழுகின்றன. இந்தியாபோன்ற ஜனநாயக நாட்டில் டீப் பேக்மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. உதாரணத்துக்கு எனது குரலை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் ஆடியோவை வெளியிட்டால் மிகப்பெரிய பிரச்சினை வெடிக்கும். இந்த பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பில்கேட்ஸ்: பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா என்ன நடவடிக்கைகளை எடுக்கிறது?
பிரதமர் மோடி: நான் அணிந்திருக்கும் ஆடை மறுசுழற்சி முறையில் நெய்யப்பட்டதாகும். பழைய துணி, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து எனதுஆடை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல பருவநிலை மாறுபாட்டை தடுக்க இந்தியா சார்பில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பூமியின் வெப்பநிலை உயருவதை தடுக்க இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.
பில்கேட்ஸ்: கரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் அஞ்சினர். இந்த பிரச்சினையை இந்தியா எப்படி எதிர்கொண்டது?
பிரதமர் மோடி: கரோனா வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். வீடுகளில் விளக்கேற்றசெய்து, பாத்திரங்களை தட்டி ஒலிஎழுப்பசெய்து மக்களின் மனஉறுதியை அதிகரிக்கச் செய்தோம்.
கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபிறகு நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எனது தாயாரும் தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதன்காரணமாக மக்களிடம் நம்பிக்கை அதிகரித்தது. அனைத்து தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இவ்வாறு அந்த கலந்துரையாடலில் இருவரும் பேசியுள்ளனர்.
பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகள்: அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு பெட்டகத்தை வழங்கினார். அதில் தூத்துக்குடி முத்துகள், நீலகிரி தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட மண் குதிரைகள், காஷ்மீர் சால்வை, காஷ்மீர் குங்குமப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கு சென்றிருந்தேன். அந்த நகரம், முத்து நகரம் என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்து உங்களுக்காக முத்துகளை வாங்கி வந்தேன். இதேபோல உங்களுக்காக தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட மண் குதிரைகளையும் வாங்கி வந்தேன். நீலகிரி, டார்ஜிலிங் தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீரை நீங்கள் குடிக்கும்போது நிச்சயமாக எனது நினைவு வரும்" என்று தெரிவித்தார். பிரதமர் மோடி வழங்கிய பரிசு பெட்டகத்துக்கு பில்கேட்ஸ் நன்றி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago