ஆந்திர ஏரியில் மிதந்த 5 தமிழர்களின் சடலங்களுக்கு நேற்று பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இது தொடர்பான விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை. இறந்தவர்கள் அனைவரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா பகுதியில் உள்ள ஏரியில் மிதந்த 5 பேரின் சடலங்களை போலீ ஸார் நேற்று முன்தினம் மீட்டனர். செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இவர்கள் போலீஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக ஏரியில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸார் கூறியிருந்தனர்.
ஆனால், மீட்கப்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தன. எனவே, இவர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிலரது உடல், கை, கால்களில் காயங்கள் இருந்தன. மேலும் இந்த ஏரியில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, போலீ ஸார் கூறுவதுபோல், இவர்கள் நீரில் மூழ்கி இறப்பதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, இவர்களது மரணத்தில் ஏதோ சதி நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரின் சடலங்களுக்கு நேற்று பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனை அறிக்கை விவரத்தை தெரிந்துகொள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பத்திரிகையாளர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதன் விவரத்தை தெரிவிக்க போலீஸார் மறுத்து விட்டனர். பிரேத பரிசோதனை விவரம் விஜயவாடாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் போலீஸார் தெரிவித்தனர். எனினும், இந்த அறிக்கை கிடைக்க 20 முதல் 30 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.
தன்ணீரில் மூழ்கி இறந்திருந்தால், நுரையீரல் உள்ளிட்ட உடல் பாகங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கும். யாராவது அடித்து ஏரியில் வீசியிருந்தால், உடலுக்குள் இருக்கும் பாகங்களில் நீர் சேராது. இதை வைத்து இது கொலையா அல்லது தற்செயலான விபத்தா என்பதை கண்டுபிடித்து விட லாம் என மருத்துவர் ஒருவர் தெரிவித் தார்.
இதனால் சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. ஏரியிலிருந்து கைப்பற்றப்பட்ட பைகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண், ஒரு ஆண் புகைப்படம், சிலரது செல்போன் எண்கள் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். ஒரு காகிதத்தில் ராமு, குமார் (சேலம்) ஆகியோரின் செல்போன் எண்களும் மற்றொரு காதிகத்தில் சக்தி என்பவரின் செல்போன் எண்ணும் இருந்த தாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ‘ஸ்ரீ லலிதா’ டெக்ஸ்டைல்ஸ், கருமந்துறை என அச்சிடப்பட்ட ஒரு மஞ்சள் பையையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
அதன் அடிப்படையில் உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் (23), முருகேசன் (42), ஜெயராஜ் (25), முருகேசன் (42), சின்னபையன் (45) ஆகியோர் என அடையாளம் கண்டுள்ளனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடப்பா வந்துள்ளனர். மேலும் சடலங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விவரங்களுக்கு 91211 00565, 91211 00581, 91211 00582 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கடப்பா போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட ரிம்ஸ் அரசு மருத்துவமனை முன்பு மனித உரிமை சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஸ்ரீநிவாஸ் கூறியதாவது:
செம்மரக் கூலி தொழிலாளர்களை கொல்வதே ஆந்திர அரசுக்கு வாடிக்கையாகி விட்டது. ஆனால், இவர்களை இயக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு உள்ள கடத்தல்காரர்களை இவர்கள் ஏன் கைது செய்வதில்லை.
கடந்த 2015-ம் ஆண்டு திருப்பதியை அடுத்த சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாகக் கூறி, ஒரே நாளில் 20 தமிழர்களை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், என்கவுன்ட்டர் செய்தால் சந்தேகம் ஏற்படும் என்பதால், இப்போது கூலி தொழிலாளர்களை ஆந்திர போலீஸார் அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் வீசிவிட்டு நாடகமாடுகின்றனர்.
இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆந்திர அரசு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago