உ.பி.யில் 46 பேருக்கு எய்ட்ஸ் பரப்பிய 10 ரூபாய் போலி டாக்டர்: எப்படி நடந்தது?- ஒரு விரிவான அலசல்

By ஒமர் ரஷித்

உத்தரப் பிரதேசம் உன்னவ் மாவட்டத்தில் ஊசியை மாற்றாமல் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்திய போலி டாக்டரால் 46 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் 10 ரூபாய் போலி டாக்டர் ராஜேஷ் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை இருந்தும் ஏன் இத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள்?, எப்படி மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த போலி மருத்துவரிடம் சென்றார்கள்? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னவ் மாவட்டம், பங்கர்மு தாலுகா, பிரேம்கஞ்ச் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பலர் எச்ஐவி நோயால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வந்தனர். முதலில் 13 பேருக்கு எச்ஐவி இருந்த நிலையில், நவம்பர் மாதத்தில் 23 ஆக அதிகரித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாநில சுகாதாரத் துறையினர் 2 மருத்துவர்கள் அடங்கிய குழு அமைத்து பங்கர்மு தாலுகா, பிரேம்கஞ்ச் பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

அந்த குழுவினர் கடந்த மாதம் 24 முதல் 27-ம் தேதி வரை 3 இடங்களில் 566 பேரிடம் பரிசோதனை நடத்தினர். அப்போது, 46 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

அப்பகுதியில் உள்ள ஒரு போலி டாக்டர் ஒருவர் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதாகக் கூறி ஊசியை மாற்றாமல், ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தி உள்ளார். இதன் காரணமாகவே எச்ஐவி கிருமி தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பிரேம்கஞ்ச் கிராமத்தில் சிறிய மருத்துவமனை நடத்திவரும் அந்த போலி டாக்டர் ராஜேஷ் யாதாவை கைது செய்ய போலீஸார் முடுக்கிவிடப்பட்டனர். தீவிர தேடுதலுக்கு பின் ராஜேஷ் யாதவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இப்போது போலீஸார் ராஜேஷ் யாதவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பங்கர்மவு தாலுகாவின் சுகாதாரத்துறை அதிகாரி அருண் பிரகாஷ் சிங் 'தி இந்து' (ஆங்கிலம்) நிருபரிடம் கூறியதாவது:

மருத்துவப் படிப்பு படிக்காமல், சிகிச்சை அளிக்க அங்கீகாரமும் இல்லாமல், போலி டாக்டர் ராஜேஷ் யாதவ் செய்த செயலால் இன்று 46 பேர் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜேஷ் யாதவ் தற்போது போலீஸாரின் விசாரணையில் இருக்கிறார். முதல் கட்ட விசாரணையில் ஒரே ஊசியை மாற்றாமல் பலருக்கு பயன்படுத்தியதால் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தெரிந்து செய்தாரா? அல்லது செலவை மிச்சப்படுத்தும் வகையில் செய்தாரா? என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கான்பூர் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்''  என்று தெரிவித்தார்.

மலிவான மருத்துவம்

பிரேம்கஞ்ச் கிராமத்தில்தான் ராஜேஷ் யாதவ் பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் தனது போலி மருத்துவத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளார். மலிவான விலையில் சிகிச்சை, மாத்திரை, மருந்துகள் கிடைப்பதால், மக்கள் இவரிடம் நாள்தோறும் கூட்டம் கூட்டமாக சென்று சிகிச்சை எடுத்துள்ளனர்.

எச்ஐவி  பாதிக்கப்பட்ட ராகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில், ''கடந்த 6 மாதங்களுக்கு முன் எனக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரியவந்தது. சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் எனக்கு உறுதி செய்யப்பட்டது. எனக்கு எப்படி இந்தக் கிருமி தாக்கியது என்றே தெரியவில்லை. நான் மிகவும் ஏழை, என்னால் அதிகமாக பணம் கொடுத்து மருத்துவ சிகிச்சைக்கு செல்ல முடியாது என்பதால், 10 ரூபாய் டாக்டர் ராஜேஷ் யாதவிடம் சிகிச்சை எடுப்பேன். அதனால் இந்த கிருமி தாக்கியது என்கிறார்கள்'' என அப்பாவியாகக் கூறுகிறார்.

மக்களை ஈர்க்க காரணம்?

பங்கர்மு தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக போலி டாக்டர் ராஜேஷ் யாதவ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். குறிப்பாக பிரேம்கஞ்ச், சக்மிர்பூர் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளித்து மக்களைக் கவர்ந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக பிரேம்கஞ்ச் கிராமத்துக்கு தினமும் தனது சைக்கிளில் செல்லும் ராஜேஷ் யாதவ், அங்குள்ள தொடக்கப்பள்ளி முன், நிரந்தரமாக கடைவிரித்து மக்களுக்கு வைத்தியம் பார்த்துள்ளார். நாள்தோறும் 50 பேருக்கு குறையாமல் சிகிச்சை அளித்து கட்டணம் வசூலித்துள்ளார். மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.

ஏன் கூட்டம் அலைமோதியது?

பிரேம்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த அனுஜ் மிஸ்ரா கூறுகையில், ''ராஜேஷ் யாதவிடம் சிகிச்சை பெறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நிற்பார்கள். சாலையில் நின்று சிகிச்சை பெறுகிறோமே என்று கூட பார்க்காமல், மக்கள் ராஜேஷ் யாதவிடம் சிகிச்சைக்காக அலைமோதுவார்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றதும், மக்கள் எளிதாக அவரைச் சந்திக்க முடிவதும், அவரிடம் மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை கிடைப்பதுதான். அதனால்தான் இவரை 10ரூபாய் டாக்டர் என்று மக்கள் இவரை அழைக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த சோட்டிலால் என்பவர் கூறுகையில், ''ராஜேஷ் யாதவ் என்ன ஊசியைப் பயன்படுத்துவார் என்பதே தெரியவில்லை. ஆனால், தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி அனைத்துக்கும் ஒரே ஊசியைத்தான் பயன்படுத்துவார்'' என்று தெரிவிக்கிறார்.

தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், ''ராஜேஷ் யாதவ் இப்படி செய்து இருப்பாரா என்பதை நம்ப முடியவில்லை. எப்போது சென்றாலும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கக் கூடியவர். எளிதாக அணுகமுடியும். ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தியதுதான் அவரின் குற்றமாக இருக்கும் என நினைக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

ஏன் நடந்தது?

பிரேம்கஞ்ச் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில்தான் பங்கர்மவு அரசு சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், அங்கு செல்வதை மக்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. இதுபோன்ற 10 ரூபாய் போலி டாக்டரிடம் தான் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் அப்பகுதி மக்களுக்கு கல்வியறிவு கிடையாது என்பதும், சுகாதார மையத்தில் தலைவிரித்தாடும் லஞ்சமும், டாக்டர்களை எளிதாக அணுகமுடியாததும் தான் காரணம் என்கின்றனர்.

பிரேம்கஞ்ச் கிராமத்தின் கவுன்சில் இஸ்கார் கான் கூறுகையில், '' பங்கர்மவு சுகாதார மையத்துக்கு சென்றால், டாக்டர்கள் கேட்கும் பணத்தை மக்களால் கொடுக்க முடியவதில்லை. மருந்துகள், மாத்திரைகளும் வைத்துக்கொண்டே இருப்பு இல்லை என்கிறார்கள். பணம் வைத்து இருப்பவர்களுக்கும், செல்வாக்குடன் இருப்பவர்களுக்கும்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதைக்காட்டிலும் முக்கியமானது, அந்தப் பகுதி மக்களுக்கு கல்வியறிவு கிடையாது. இதனால்தான் இதுபோன்ற 10ரூபாய் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று நோயைப் பெற்றுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

பங்கர்மவு சுகாதார நிலையத்தின் அவலம் குறித்து பிஎட் படிக்கும் அஜெய் குமார் என்ற மாணவர் கூறுகையில், ''சுதாகார நிலையத்தில் டாக்டரிடம் முன்அனுமதிச் சீட்டு பெற ஒரு ரூபாய்தான் கட்டணம். ஆனால், டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளும், மாத்திரைகளும் விலை உயர்வாக இருப்பதால், எங்களுக்கு  200 முதல் 300 ரூபாய்வரை செலவாகிறது

மக்களுக்கு இலவசமாக மருத்துகள் கொடுப்பதில்லை. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளும்,மருந்துகளும் குறிப்பிட்ட இரு மருந்துக்கடைகளில் மட்டுமே கிடைக்கிறது.

என் மாமாவுக்கு நாய் கடித்துவிட்டது என்று சிகிச்சைக்காக சுகாதார நிலையம் சென்றபோது, மருந்து இருப்பு இல்லை எனக் கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்'' என்றார்.

தமிழில்: போத்திராஜ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்