புதுடெல்லி: “பதவியில் இருக்கும் ஒரு முதல்வரை கைது செய்ய 4 சாட்சியங்கள் போதுமா?” என்று மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார். அதேவேளையில், கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, அமலாக்கத் துறையின் காவல் இன்று (மார்ச் 28) நிறைவடைந்த நிலையில், கேஜ்ரிவால் இன்று மதியம் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் சில நிமிடங்கள் பேச அனுமதிக்கப்பட்டார். தனது பேச்சின்போது, “ஆம் ஆத்மி கட்சியை அமலாக்கத் துறை அழிக்கப் பார்க்கிறது. நான் கைது செய்யப்பட்டுள்ளேன். ஆனால், எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளியாக சொல்லவில்லை. மேலும், ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக சொல்லப்பட்டதில் கொஞ்சம் கூட மீட்கவில்லை. உண்மையில் 100 கோடி ஊழல் நடந்தால், பணம் எங்கே?.
சிபிஐ 31,000 பக்கங்கள், அமலாக்கத் துறை 21,000 பக்கங்கள் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளன. இந்த இரண்டையும் ஒன்றாக படித்தால் கூட எஞ்சி நிற்கும் கேள்வி, நான் ஏன் கைது செய்யப்பட்டேன் என்பதே? ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் என் பெயர் நான்கு முறை மட்டுமே இடம்பெற்றுள்ளது.
» “ஊழலற்ற நாட்டை உருவாக்க பாஜக விரும்புகிறது” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு
» “இறுதி மூச்சு வரை என் தொகுதி மக்களுடன் உறவு...” - பாஜகவில் சீட் கிட்டாத வருண் காந்தி உருக்கம்
அதிலும் ஒரு முறை 'சி அரவிந்த்' என்று இருந்தது. இந்த சி அரவிந்த் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்தார். அவர் முன்னிலையில் சிசோடியாஜி என்னிடம் சில ஆவணங்களைக் கொடுத்தார் என்று குற்றப்பத்திரிகையில் சொல்லப்பட்டுள்ளது. கோப்புகளை கொடுக்க, அரசு குறித்து விவாதிப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் தினமும் என் வீட்டுக்கு வந்தனர். பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இப்படி ஓர் அறிக்கை போதுமா?
இந்த வழக்கில் இதற்கு முன் கைது செய்யப்பட்டு அப்ரூவராக மாறியவர்கள் என் மீது குற்றம்சாட்ட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறைக்கு ஒரே ஒரு பணி மட்டுமே, அது எப்படியாவது என்னை சிக்க வைக்க வேண்டும் என்பதே.
இந்த வழக்கில் நான்கு சாட்சிகளால் நான்கு முறை என் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய 4 சாட்சிகள் போதுமானதா? இந்த வழக்கின் ஒரு சாட்சி என் பெயரை குறிப்பிடாத ஆறு அறிக்கைகளை அளித்திருந்தார். ஆனால் ஏழாவது அறிக்கையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதேபோல் மூன்றாவது சாட்சியான சரத் ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு அவர் பாஜகவுக்கு ரூ.50 கோடி நன்கொடை அளித்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்று கேஜ்ரிவால் தெரிவித்தார்.
இதேபோல் கேஜ்ரிவால் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், "அமலாக்கத் துறையானது பாரதிய ஜனதா கட்சியால் எதிர்க்கட்சிகளை குறிவைக்க பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆம் ஆத்மி கட்சி ஊழலற்றது என்பது தேசத்தின் முன் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ளத் தயார். நீங்கள் விரும்பும் வரை என்னை ரிமாண்டில் வைத்திருக்கலாம். விசாரணைக்கு நான் தயார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, "கேஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார். அமலாக்கத் துறையிடம் எத்தனை ஆவணங்கள் உள்ளன என்பது அவருக்கு எப்படித் தெரியும்? அவர் சொல்பவை அனைத்தும் அவரது கற்பனையே. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் மூலம் பெறப்பட்ட பணம் பரிசாக கிடைத்துள்ளது. ஹவாலா மூலம் பணம் வந்ததற்கான அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
கேஜ்ரிவால் ரூ.100 கோடிக்கான பரிசுகளை கேட்டார் என்பதைக் காட்ட எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது. கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மழுப்பலாக பதிலளித்து வருகிறார். மேலும், தனது டிஜிட்டல் சாதனங்களின் கடவுச்சொற்களை தரவும் மறுக்கிறார்" என்று வாதிட்டார்.
இந்த வாதங்களுக்கு பின் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் அமலாக்கத் துறை காவலை மேலும் நான்கு நாட்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago