“ஊழலற்ற நாட்டை உருவாக்க பாஜக விரும்புகிறது” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஊழலற்ற நாட்டை உருவாக்க பாஜக விரும்புகிறது என அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், "ஊழலற்ற நாடாக இந்தியாவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எதிர்க்கட்சிகள் ஊழலில் ஈடுபடுபவர்களாகவும், அதனை பாதுகாக்கக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்தார்களோ அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள்.

நிலக்கரித் துறையின் அமைச்சராக நான் இருந்தபோது அந்த கோப்புகளை பார்த்திருக்கிறேன். தூக்கத்தில் இருப்பவரும் விழித்துக்கொள்ளும் வகையில் முந்தைய காங்கிரஸ் அரசு முடிவுகளை எடுத்தது.

அரவிந்த் கேஜ்ரிவால் எதிர்காலத்தில் பாஜகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறீர்கள். நாட்டை கொள்ளையடித்தவர்களை, மிகப் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியவர்களை பாஜக ஒருபோதும் வரவேற்காது.

ஊழலை ஒழிக்க வேண்டுமானால், அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம். ஊழலை ஒழிக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் இந்த அமைப்புகள் மிக மிக முக்கியமானவை. சுதந்திரமாக இயங்கும் அந்த அமைப்புகள் தங்கள் வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால், அவர்கள் யாரை தங்கள் தலைவராக பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? மோடிக்கு எதிராக எதிர் தரப்பில் முன்னிருத்தப்படுபவர் யார் என்பதில் தெளிவு இல்லை. அவர்களின் பிரதமர் வேட்பாளரை ஏன் இன்னும் அவர்கள் அறிவிக்காமல் இருக்கிறார்கள்?

நான் மும்பை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன். பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால சிறப்பான செயல்பாடு காரணமாக நாட்டின் அனைத்து மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். எனவே, எனது வெற்றி குறித்த கவலை எனக்கு இல்லை" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE