ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர்கள் 9 பேர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புபனேஸ்வர்: ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மே 13ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியின் மக்களவை வேட்பாளர்கள் 9 பேரின் பட்டியலை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பிரணாப் பிரகாஷ் தாஸ் சாம்பல்பூர் தொகுதியிலும், லம்போதர் நியால் காலஹண்டி தொகுதியிலும், மன்மத் ரோட்ரே புபனேஸ்வர் தொகுதியிலும், அன்ஷூமன் மொகந்தி கேந்திரபாரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். பிரதிப் மஜி நபரங்பூர் தொகுதியிலும், திலிப் திர்கே சவுந்தர்கர் தொகுதியிலும், சுதம் மராண்டி பயூர்பஞ்ச் தொகுதியிலும், ரஞ்சிதா சாஹூ, அஸ்கா தொகுதியிலும், கவுசல்யா ஹிகாகா கோரபுட் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

ஒடிசாவில் பாஜக - பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடப் போவதாக மாநில தலைவர் மன்மோகன் சமல் கடந்த 22ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார். "தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், வளர்ச்சி அடைந்த இந்தியா, வளர்ச்சி அடைந்த ஒடிசாவை உருவாக்க வேண்டும் என்ற ஒடிசாவின் 4.5 கோடி மக்களின் நம்பிக்கையையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் வகையில் இந்த தேர்தலில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளிலும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற இருக்கிறது" என அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, பாஜக - பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, பிஜு ஜனதா தளம் தற்போது 9 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், 1998 முதல் 2009 வரை பாஜக - பிஜு ஜனதா தளம் கூட்டணி அமைத்து 3 மக்களவைத் தேர்தல்களையும், 2 சட்டப்பேரவைத் தேர்தல்களையும் சந்தித்திருக்கின்றன.

தற்போதைய சூழலில், பாஜக வசம் 8 மக்களவை உறுப்பினர்களும், 23 எம்எல்ஏக்களும் இருக்கின்றனர். பிஜு ஜனதா தளம் வசம் 12 மக்களவை உறுப்பினர்களும், 112 எம்எல்ஏக்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE