அசாமில் பாஜக, காங். வேட்பாளர் நேருக்கு நேர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

திஸ்பூர்: அசாம் மாநில மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். தேர்தலில் வெற்றி பெற பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அசாமில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அசாம்கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன. பாஜக 11, அசாம்கண பரிஷத் 2, ஐக்கிய மக்கள் கட்சி ஓரிடத்தில் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கூட்டணியில் அந்த கட்சி 13 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான அசாம் ஜாதிய பரிஷத் ஓரிடத்திலும் போட்டியிடுகின்றன.

அசாமின் திப்ருகார் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி கட்சியான அசாம் ஜாதிய பரிஷத்தின் தலைவர் லூரின்ஜோதி கோகோய் போட்டியிடுகிறார்.

திப்ருகார் தொகுதிக்கு உட்பட்ட ஹல்திபாரி நகரில் உள்ள கோயிலில் அமைச்சர் சர்வானந்த சோனோவாலும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் லூரின்ஜோதி கோகோயும் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் சுவாமியை வழிபட சென்றனர். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். இந்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் லாரின்ஜோதி கோகோய் வெற்றி பெறவாழ்த்தினேன். நாங்கள் இருவருமேஜனநாயகத்தை வலுப்படுத்த எதிரெதிர் அணியில் போட்டியிடுகிறோம். அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் லூரின்ஜோதி கோகோய் கூறும்போது, “நானும் அமைச்சர் சர்வானந்த சோனோவாலும் ஆரம்ப காலத்தில் அசாம் மாணவர்கள் கூட்டமைப்பில் ஒன்றாக பணியாற்றினோம். அதன்பிறகு இருவரும் பிரிந்துவிட்டோம். அரசியல்ரீதியாக இருவரும் வெவ்வேறு கருத்துகளை கொண்டிருக் கிறோம். எனினும் எங்களது ஆரம்ப கால நட்புறவு தொடர்கிறது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE