செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 23: கேஜ்ரிவால் உருக்கம் முதல் மாஸ்கோ பயங்கரம் வரை

By செய்திப்பிரிவு

“இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின்: “டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு, கடும் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

“பறவை போல அடிக்கடி கூட்டணி மாறுகிறார் அன்புமணி” - இபிஎஸ்: “வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி மாறிக் கொண்டிருப்பவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமில்லை, பாஜகவுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பதாகச் சொன்னவர் பெரியவர் ராமதாஸ். இப்போது அதே கட்சியின் கூட்டணியில் இணைந்து வெற்றி பெறப்போவதாகச் சொல்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கூட்டணியில் இணைகிற கட்சிதான் பாமக” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கேஜ்ரிவால் உருக்கமான வேண்டுகோள்: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேஜ்ரிவால் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பதாக தெரிவித்துள்ளார். அதில், “நான் சிறைக்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நாட்டுக்காகவே சேவை செய்வேன். நான் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளேன். தொடர்ந்து இயக்கங்களை முன்னெடுப்பேன். எனவே இந்த கைது என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை.

உங்களின் மகனாகவும், சகோதரனாகவும் இருக்கும் நான் இரும்பினால் செய்யப்பட்டவன். நான் மிகவும் வலிமையானவன். உங்களிடம் முன்வைக்க எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கோயிலுக்குச் சென்று எனக்காக கடவுளின் ஆசிர்வாதத்தைக் கோருங்கள். இந்த தருணத்தில், ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை கைது செய்திருப்பதால், நீங்கள் பாஜகவினரை வெறுக்காதீர்கள். அவர்களும் நமது சகோதரர்கள்தான்.” என்று கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

அலுவலகத்துக்கு ‘சீல்’ - ஆம் ஆத்மி குற்றச்சாடு: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தை கட்சியினர் அணுக முடியாதபடி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரவிந்த் கேஜ்ரிவாலை ‘மதுபான ஊழலின் மன்னன்’ என்று அமலாக்கத் துறை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சி, “இந்த வழக்கில் தொடர்புடைய அரபிந்தோ பார்மா உரிமையாளர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அளித்த பணம், பாஜகவுக்கு சென்றது” என்று பதிலடி கொடுத்துள்ளது.

அதேநேரத்தில், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு சவால் @ கோவை தொகுதி: “கோயம்புத்தூர் வளர்ச்சிக்காக பேச நான் தயார். அண்ணாமலை தயாரா...? தயார் என்றால் நேரம், நாள், இடம் குறியுங்கள். வருகிறேன்” என்று கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சவால் விடுத்துள்ளார்.

கவிதா காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: டெல்லி மதுபான ஊழல் முறைகேடு வழக்கில் கடந்த 15-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே. கவிதாவின் காவல் வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர். கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் ஆணையம் கடந்த 15-ம் தேதி உத்தரவிட்ட நிலையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

பாஜகவில் இணைந்த 6 பேர்!: தகுதி நீக்கம் செய்யப்பட்ட இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பாஜகவில் சனிக்கிழமை இணைந்துள்ளனர்.

இதனிடையே, குஜராத் பாஜக வேட்பாளர்கள் இருவர் மக்களவைத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மாஸ்கோ தாக்குதலில் பலி 115 ஆக அதிகரிப்பு: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலியானோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

சமீப காலங்களில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது. இந்தத் தாக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

“நாங்கள் முன்பே எச்சரித்தோம்” - அமெரிக்கா: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ தாக்குதல் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறுகையில், “இம்மாதத் தொடக்த்திலேயே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்த சதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக இசை நிகழ்ச்சியை குறிவைத்து சதி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு தகவல் அளித்தது. தீவிரவாத சதிச் செயல்களைப் பற்றி தகவல் கிடைத்தால் அதை நாடுகளுடன் பகிர்வதை கடமையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் போட்டியால் நட்சத்திர தொகுதியான விருதுநகர்!: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணிக்கம்தாகூர் எம்.பி.யே இம்முறையும் வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. அதோடு, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரைப்பட நடிகை ராதிகாவும், அதிமுக கூட்டணியில் வேட்பாளராக திரைப்பட நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனும் போட்டியிடுவதால் இம்முறை விருதுநகர் மக்களவைத் தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்: தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நெல்லை அதிமுக வேட்பாளர் மாற்றம்: மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரை கட்சித் தலைமை திடீரென்று மாற்றியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சிம்லா முத்துச்சோழனுக்கு பதிலாக திசையன்விளை பேரூராட்சி தலைவர் மு. ஜான்சி ராணி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சனிக்கிழமை மாலையில் அறிவித்தார்.

‘பாஜக பெற்ற ‘ப்ரீப் பெய்டு’, ‘போஸ்ட் பெய்டு’ லஞ்சம்’: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சி, “வெளிப்படைத் தன்மையில்லாத இந்தத் திட்டமானது வங்கிகள் மூலமாக, ப்ரீப் பெய்டு, போஸ்ட் பெய்டு மற்றும் ரெய்டுக்கு பின்பாக என லஞ்சம் பெறுவதை உறுதி செய்துள்ளது” சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மோடிக்கு சரத் பவார் சரமாரி கேள்வி: பாரமதி தொகுதியில் போட்டியிடும் சுப்ரியா சுலேவை ஆதரித்துப் பேசிய சரத் பவார், "நாடு இன்று வித்தியாசமான நிலையில் இருக்கிறது. வரக்கூடிய மக்களவைத் தேர்தல் மிக மிக முக்கியமானது. 2024-க்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என பிரதமர் மோடி ஒருமுறை கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து விவசாயிகள் இழப்பீடு கோரினர். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை." என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல் வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பஞ்சாப் அணி பதிவு செய்துள்ளது. இதில் சாம் கரன் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு உறுதுணையாக திகழ்ந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்