சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டி

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் பாஜகதனித்துப் போட்டியிடுகிறது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகளும் 147 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

ஒடிசா மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு பிஜூ ஜனதா தளம் - பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

இந்த சூழலில் ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் முழு ஆதரவு அளித்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள் கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி அரசின் நலத்திட்டங்கள் ஒடிசாவில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. இதன்காரணமாக ஒடிசா மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் ஒடிசா அரசின் செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒடிசா மக்களின் நலன் கருதி மாநில சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். இவ்வாறு மன்மோகன் சமல் தெரிவித்துள்ளார்.

பிஜு ஜனதா தள எம்பி விலகல்: ஒடிசாவின் கட்டாக் மக்களவைத் தொகுதி எம்பியாக பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த பரத்ருஹரி மஹ்தாப் பதவி வகித்து வந்தார். அவர் நேற்று கூறும்போது, “ஊழலற்ற ஆட்சிக்காக பிஜு ஜனதா தளத்துக்கு ஒடிசா மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமை சரியில்லை. ஒடிசா மக்களின் நலன் கருதிபிஜு ஜனதா தளத்தில் இருந்துவிலகுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் பாஜகவில் இணையஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிஜு ஜனதாதளத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாலபத்ர மாஜ்ஹியும் பாஜகவில் இணைவார் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE