சீன நாட்டவர்களுக்கு விசா தந்த விவகாரம்; கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றார் - அமலாக்கத் துறை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கார்த்தி சிதம்பரம் அவரது நெருங்கிய கூட்டாளி வழியாக வேதாந்தா குழுமத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளார் என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

வேதாந்தா குழுமம் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 260 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2022 மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அவரது நெருங்கிய கூட்டாளியான பாஸ்கரராமனை சிபிஐ கைது செய்தது.

சிபிஐ பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடந்த மாதம் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், “வேதாந்தா குழுமத்தின் தல்வாண்டி சபோபவர் நிறுவனம் சீன ஊழியர்களுக்கு விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்தை அணுகியது. இதற்காக அந்நிறுவனம் அவருக்கு ரூ.50 லட்சம் வழங்கியது. இந்தப் பணம் கார்த்தியின் நெருங்கிய கூட்டாளியான பாஸ்கர ராமன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தத் தொகையை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE