புதுடெல்லி: நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்துக்கோ, ஏற்றத்தாழ்வுக்கோ சாதிவாரி கணக்கெடுப்பு தீர்வாக இருக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் தலைமையலான அரசு மத்தியில் அமைந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பை முக்கிய பிரச்சினையாக அவர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி இதனை அங்கீகரித்திருக்கிறது. நீண்ட காலமாக சாதி அடிப்படையில் அரசியல் செய்யக்கூடிய கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. இருந்தபோதும், காங்கிரஸ் கட்சியின் சமூக நீதி என்பது முதிர்ச்சியானது; இந்திய சமூகம் குறித்த புரிதல் நிறைந்தது.
வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பாகுபாட்டுடன் நடத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக தேசிய இயக்கத்தின் தலைவர்கள் பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, நேர்மறை எண்ணத்துடன் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவர்களின் ஒருங்கிணைந்த ஞானம் அதில் வெளிப்பட்டது.
அதன்பிறகு இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. கடந்த 34 வருடங்களாக அதனை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது. சாதி அடிப்படையில் இந்திய சமூகம் உள்ள போதிலும், காங்கிரஸ் ஒருபோதும் சாதி அரசியலில் ஈடுபட்டதில்லை; அதனை அங்கீகரித்ததில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதில் கட்சி நம்பிக்கை கொண்டிருக்கிறது.
சாதி அரசியலுக்கு எதிராக 1980களில் இந்திரா காந்தியும், 1990களில் ராஜிவ் காந்தியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள். சாதியால் நாடு பிளவுபடுத்தப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரிக்காது என ராஜிவ் காந்தி பேசி இருக்கிறார். தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி இருப்பது நாடு முழுவதிலும் கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிப்பது, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் புகழுக்கு அவமரியாதை செய்வதாகும். சாதிவாரி கணக்கெடுப்பு வேலையின்மைக்கோ, ஏற்றத்தாழ்வுகளுக்கோ பரிகாரமாகவோ அல்லது தீர்வாகவோ இருக்க முடியாது” என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago