ராகுலுக்கு டஃப், முக்கிய பெண் ஆளுமை... யார் இந்த ஆனி ராஜா? | 2024 தேர்தல் கள புதுமுகம்

By ஷாலினி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், கேரளாவில் காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து களம் காண்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா. ராகுல் காந்திக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு அரசியலில் கைதேர்ந்தவரா ஆனி ராஜா என்ற கேள்விகளுடன் கேரள அரசியல் களம் பரபரக்கிறது.

ராகுலும் வயநாடும்: கேரளாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள வயநாடு தொகுதி வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஒரு முக்கிய போர்க்களமாக மாறியுள்ளது. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த கட்சி என்ற நல்ல மதிப்பைக் கொண்டிருக்கும் கட்சிதான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் பலம், ராகுல் காந்தியின் செல்வாக்கு பற்றி நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதேவேளையில், ஊழல், வாரிசு அரசியல் எனப் பல வகைகளில் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து பாஜக ஆட்சியை பிடித்தது.

மூன்றாவது முறையாக மோடிதான் பிரதமர் என துள்ளிக் குதிக்கிறார்கள் பாஜகவினர். மறுபக்கம் அவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இண்டியா கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள். ஆனால் இண்டியா கூட்டணிக்குள்ளே ஒற்றுமை இல்லை என எதிர்க்கட்சிகள் டமாரம் அடித்து வருகிறார்கள். அதை மெய்பிக்கும் விதமாக சில சம்பவங்களும் நிகழ்கின்றன.

கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்தான் வெற்றிப் பெற்று வந்தது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அப்போது உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவிய ராகுல் காந்தி, கேரளத்தின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வீத்தினார் ராகுல்.

வரப்போகும் மக்களவைத் தேர்தலிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியிடம் ஆனி ராஜா பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். அதற்கு முன்பு அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

யார் இந்த ஆனி ராஜா? - கேரளாவின் கண்ணூரை பூர்விகமாக கொண்டவர் ஆனி ராஜா. கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த ஆனியின் தந்தை பெயர் தாமஸ். இவர் ஒரு விவசாயி ஆவார். அதோடு தாமஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார். பிறகு ஆனியும் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் கூட்டமைப்பிலும் (student wing, All India Students Federation), தொடர்ந்து அதன் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பிலும் (youth wing, All India Youth Federation) தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பிறகு சிபிஐ-யின் மகளிர் பிரிவின் கண்ணூர் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார். மேலும், மாணவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களில் (Student activist) முன்நின்று கலந்து கொண்டார். 22 வயதில், சிபிஐயின் மாநில செயற்குழு உறுப்பினரானார். அதன் பிறகு கட்சியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். தனது கணவர் டி ராஜாவை அவர் கட்சிப் பணியின் மூலம் சந்தித்திருக்கிறார்.

பிறகு 1990-இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நேரத்தில், ஆனி கட்சியில் தனக்கென ஒரு இடத்தைப் தக்கவைத்துக் கொண்டார். கல்வியில் பட்டம் (B.Ed) பெற்ற ஆனி ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், அவர் பல்வேறு பெண்கள் பிரச்சினைகளில் இடதுசாரி பிரச்சாரங்களை வழிநடத்தத் தொடங்கினார்.

தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஆனி ராஜாவின் கணவர் டி.ராஜா தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் இடதுசாரிகள் இயக்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதோடு பெண்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.

குறிப்பாக மணிப்பூர் சம்பவத்தின்போது, “மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. மணிப்பூரில் மோசமடைந்து வரும் இன நெருக்கடிக்கு மத்திய அரசு வாயைமூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது” என மோடி அரசை கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தார். வயநாடு மக்களவைத் தொகுதியில் ஆனி டி.ராஜா களமிறங்குவதால் ராகுல் காந்திக்கு கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பாஜக ஆட்சிக்குவந்த பின்னர், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பழங்குடியினர் மீதான வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டுள்ளது என ஆனி மேடைக்கு மேடை பாஜகவை எதிர்த்து பேசி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி எழுப்பும் தலைவர்கள்: ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடக் கூடாது என தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த எதிர்ப்புகளை கண்டு கொள்ளாமல் வயநாட்டில் ராகுல் மீண்டும் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில், வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிடும் ஆனி ராஜா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “இது எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. வயநாட்டில் யாரை வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தட்டும். அது அவர்களுடைய உரிமை. ஆனால் இண்டியா கூட்டணியின் முக்கிய அடையாளமாகத் திகழும் ராகுல் காந்தி, அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் இன்னொரு முக்கிய கட்சியின் தேசியத் தலைவரை எதிர்த்து போட்டியிடுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறார்? அவருடையை பிரதான அரசியல் எதிரி பாஜகவா அல்லது கம்யூனிஸ்டுகளா என்ற கேள்வியைத்தான் நாங்கள் கேட்கிறோம். ராகுல் காந்தி நிச்சயமாக நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.

எங்களுடைய விருப்பமும் அதுதான். அதற்காக வயநாட்டில்தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்களுடைய இந்த நேரடி போட்டியால் கேரளத்தில் பாஜவுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. ஆனால் இது பற்றி நாட்டின் பிற மாநிலங்களில் பிரதமர் மோடி நிச்சயம் பிரச்சாரம் செய்வார். அவ்வாறு பிரச்சாரம் செய்தால், அதனால் ஏற்படும் அத்தனை விளைவுகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும், வயநாடு தொகுதி குறித்து ராகுல் காந்தி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு இண்டியா கூட்டணுக்குள்ளே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

வயநாடு தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் நிலையில், ராகுல் காந்திக்கும் ஆனி ராஜாவுக்கும் இடையேயான போட்டி, தேசிய அரசியலில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். இது பாஜவுக்கு சாதகமாகவும் அமையலாம். ஆனி ராஜா சிறு வயதில் இருந்தே அரசியலில் துடிப்புடன் இயங்கி வந்தாலும், தேர்தல் அரசியல் அவருக்கு சற்று புதிதானதுதான். இருப்பினும் வயநாட்டில் யார் தனது வெற்றி கொடியை நட்டுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

> முந்தையப் பகுதி: மம்தாவின் ‘யார்க்கர்’... ஐபிஎல் புகழ்... யார் இந்த யூசுப் பதான்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்