இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம்: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

By செய்திப்பிரிவு

சென்னை: இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 20) நிறைவு பெறுகிறது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘யுவிகா' என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

செய்முறை விளக்க பயிற்சி: இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்க பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர்.

அதன்படி நடப்பாண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே 13 முதல் 24-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

இணையதள விண்ணப்பம்: இந்நிலையில் யுவிகா பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 20) முடிவடைகிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் வழியே துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் மார்ச் 28-ல் வெளியாகும். அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அதன்பின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியல் ஏப்ரல் 4-ம் தேதி வெளியிடப்படும். தேர்வாகும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE