‘நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள்; தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். விடுதலை வேட்கையை கவிதைகளால் தூண்டிய பாரதியாரும் இந்த சக்தியை உணர்ந்தே, ’இளைய பாரதத்தினாய் வா வா வா, எதிரிலா வலத்தினாய் வா வா வா’ என்று அழைப்பு விடுத்தார். இதே போல் பிரதமர் நரேந்திர மோடியும், இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், ஏழைகள் ஆகியோரை 4 பெரிய சாதிகள் என வகைப்படுத்துகிறார்.
அரசியலமைப்பு சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது என்றாலும், வாக்காளர் சேர்ப்பு இடையறாது நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதி அன்று 18 வயது நிரம்பும் அனைவரும் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ளலாம். வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான முகாம்களிலோ அல்லது அலுவலகங்களுக்கு சென்றோ படிவம் பூர்த்தி செய்து பெயர் சேர்க்கும் நடைமுறை இருந்தது.
இதை, டிஜிட்டல் யுகம் மாற்றிவிட்டது. இப்போது இணையதளம் வழியாகவே 6-ம் எண் படிவத்தைப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக்கொள்ள முடிகிறது. இதன் பயனை அண்மையில் வெளியிடப்பட்ட இந்திய அளவிலான வாக்காளர் பட்டியல் வழியாக அறியலாம்.
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்த முறை 18-வது மக்களவையை அமைப்பதற்கான தேர்தலை சந்திக்கிறது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் எண்ணிக்கை 89.6 கோடியாக இருந்தது. 2024 -ம் ஆண்டு தேர்தலுக்கு 96.88 கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் சுமார் 7 கோடி வாக்காளர்கள் தங்களைப் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களில் 2019-ல் 45.64 லட்சமாக இருந்த மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எண்ணிக்கை, 2024-ல் 88.35 லட்சமாகி விட்டது. 2019-ல் 39,683 ஆக இருந்த மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை இப்போது 48,044 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக வாக்களிப்பவர்களில் 18 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எண்ணிக்கை 2019-ல் 1.5 கோடியாக இருந்தது. இது 1.85 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வில் தமிழ்நாட்டின் 5.2 லட்சம் புதிய வாக்காளர்களும் அடங்குவர். நாடு முழுவதும் சுமார் 20 கோடி வாக்காளர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
ஒட்டுமொத்த வாக்காளர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள். 47.1 கோடி பேர் பெண்கள். இந்த தேர்தலில் 100 வயதை கடந்த 2,38,791 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களின் வாக்கு புதிய இந்தியாவைக் கட்டமைக்க உதவும் என்பதற்காகத்தான் 'எனது முதல் வாக்கு-தேசத்திற்காக' என்றஇயக்கத்தை தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது. இதனை,பிரதமர் மோடியும் வழிமொழிந்துள்ளார். வாக்களிப்பது கடமை மட்டுமல்ல; ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் உரிமையும் கூட.
‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு' என்ற சமத்துவ ஜனநாயகக் கோட்பாட்டை 1950-ல் பிறக்கும்போதே உலகுக்கு உணர்த்தியது இந்தியக் குடியரசு. அதன் அடிப்படையான ஜனநாயக மாண்பை பாதுகாப்பதில் இளைஞர்களின் பங்கு மகத்தானது.
பொதுவாக ஒவ்வொரு வாக்கும் அவரவர் விருப்பத்தையும் தெரிவையும் அச்சமின்றி, சுதந்திரமாக, நியாயமாக வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. குறிப்பாக,முதல்முறை இளம் வாக்காளர்களின் விருப்பமும் தெரிவும் எதிர்காலத்தின் அளவுகோலாக மதிப்பிடப்படும். எனவே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் காட்டப்படும் ஆர்வம் வாக்களிப்பதிலும் பிரதிபலிக்க வேண்டும். முதல் வாக்காளர், வாக்குச்சாவடியின் முதலாவது வாக்காளராக நிற்பதில் வெளிப்பட வேண்டும்.
டிஜிட்டல் யுகத்தில் வாழும் இளைஞர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இணையத்திலேயே தேடித் தெரிந்து கொள்கின்றனர். இதனால், மத்திய தேர்தல் ஆணையமும் அதற்கான வழிகளை வகுத்துள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு வழிகாட்டவும் எவரும் தேவையில்லை.
இளம் தலைமுறை விரும்பும் இணையங்களிலேயே அறிந்து கொள்ளலாம். வாக்களிக்க தயாராக உள்ள பாதையில், இளம் தலைமுறை பயணம் சிறந்த ஜனநாயக ஆட்சியை தேர்வு செய்யும். நம் நாட்டின் ஜனநாயக விழுமியம் காப்பதில் இது முக்கியப் பங்களிப்பாகவும் இருக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago