‘பாஜகவை விட இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் இல்லை’ - மும்பையில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாஜகதான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைபயண நிறைவு விழா மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தை கடந்த ஜனவரி 16-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் மும்பையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு இண்டியா கூட்டணியன் அங்கம் வகிக்கும் பல்வேறு கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்றார்.

“ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் தெற்கில் குமரியில் இருந்து தொடங்கியது. இந்தப் பயணம் இன்று மும்பையை எட்டியுள்ளது. இந்திய ஒற்றுமை நீதி நடைபயணத்தின் அசல் வெற்றி பாஜகவை வீழ்த்தி டெல்லியில் கூட்டாட்சி அமைப்பதில்தான் உள்ளது. இது காங்கிரஸ் அல்லது ராகுல் காந்தி என்ற தனி மனிதனுக்கான பயணம் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பயணம். இந்தியாவை மீட்டெடுக்கும் பயணம். இந்த பயணத்தில் திரண்ட கூட்டத்தை கண்டு பாஜக அச்சம் கொண்டுள்ளது. 'இந்தியா' என சொல்வதை பாஜக தவிர்த்து வருகிறது. விரைவில் பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும்.

இந்திய தேசத்துக்கு பாஜகவை விட பெரிய அச்சுறுத்தல் இருக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி, தனது 10 ஆண்டுகால பதவிக்காலத்தில் செய்தி இரண்டே காரியம் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக மட்டுமே இருந்தது. இதற்கு நாம் விடை கொடுக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE