ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. அதன்படி,ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19-ல் வாக்குப் பதிவு: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 20-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 27-ல் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 28-ல் நடக்கும். வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாளாக மார்ச் 30 அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின், வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ல் நடைபெறும்.
அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
» 5 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் திருப்பூரின் 8 சட்டப்பேரவை தொகுதி மக்கள்!
» “தமிழக மீனவர்களை பிரதமர் மோடி ஏமாற்றுகிறார்” - முத்தரசன் சாடல்
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகிறது. வாசிக்க > மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்: கட்டுப்பாடுகள் என்னென்ன
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.8 கோடி மக்கள் தகுதி: “2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நாடு முழுவதும் 96.8 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள். மாற்றுத்திறனாளிகள் 88.4 லட்சம் பேர். மாற்றுப் பாலினத்தவர் 48 ஆயிரம் பேர். மொத்த வாக்காளர்களில் 1.82 கோடி பேர் முதன்முறை வாக்காளர்களாவர். 85 வயதைக் கடந்த வாக்காளர்கள் 82 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம் பேர் உள்ளனர்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பொய்ச் செய்திகளுக்கு எதிராக புதிய திட்டம்: சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024 குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பக் கூடாது என எச்சரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ‘மித் vs ரியாலிட்டி’ திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை: சத்யபிரதா சாஹு : "தமிழகத்தில் விளவங்கோடு தொகுதிக்கு மட்டும்தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை. பொன்முடியே மீண்டும் எம்எல்ஏவாக தொடர்கிறார்" என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
“விஷ்வகுருவா, மவுனகுருவா?” - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி: “தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து சிறைப் பிடிக்கப்படுவதையும் சித்திரவதைக்கு ஆளாவதையும் தடுத்து நிறுத்தாதது ஏன்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அதானி நிறுவனத்தின் வர்த்தக நலன்களுக்காக இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்த ஒன்றிய பாஜக அரசு, இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமைக்காக வாய்திறக்காதது ஏன்? படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்கிவிட்டதாக அறிவிக்கிறது இலங்கை அரசு. இந்திய அரசு இதை அதிகாரப்பூர்வமாக, வெளிப்படையாகக் கண்டிக்காதது ஏன்?” என்று கேள்விகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின், “விஷ்வகுரு என மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? தன் சொந்த இயலாமையை மறைக்கத் திமுக மீது சேற்றை வாரி இறைக்கும் கபட நாடகத்தை எங்கள் மீனவர்கள் தோலுரிப்பார்கள்” என்று சாடினார்.
இதனிடையே, அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காது கிழிய பேசிய மோடியின் வாய்ச் சவடால் மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்றும், தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க இண்டியா கூட்டணி மீது பழி சுமத்துகிறது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.
“பொன்முடி பதவி ஏற்பதில் தடையில்லை” - அமைச்சர் ரகுபதி: “தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆளுநரின் தனி ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டப்படும். பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை. தேர்தல் தேதி அறிவித்தாலும் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவித்து பதவி ஏற்பு விழா நடத்தப்படும்” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
“தமிழர்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்”: தமிழகம் என்பது, பாஜகவின் எதிர்ப்பு பூமி. தமிழக மக்கள் எந்த காலத்திலும் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சிஏஏ அமலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒவைசி மனு: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தபட்டிருப்பதற்கு தடை விதிக்கக் கோரி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “சிஏஏ தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பிரிவு 6பி-ன் கீழ் குடியுரிமை கோரும் எந்த ஒரு விண்ணப்பத்தையும் அரசு ஏற்கவோ அல்லது பரிசீலனை செய்யவோ கூடாது. அதற்கேற்ப உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளான கவிதா டெல்லி - ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை ஆஜர்படுத்தப்பட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்: அமலாக்கத் துறை சம்மன்களுக்கு ஆஜராகததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் - அமித் ஷா ஆவேசம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் முதன்முறையாக தேர்தல் பத்திரங்கள் பற்றி தனது கருத்தைப் பகிர்ந்துள்ள அமித் ஷா, “அரசியல் கட்சிகளுக்கான நிதி வழங்கலில் கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் வாங்கும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போது உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதித்துள்ளதால் மீண்டும் கருப்புப் பணம் நன்கொடையாக மாறும் வாய்ப்பு உருவாகும். முன்னதாக, கட்சிகளுக்கான நிதி ரொக்கமாக வழங்கப்பட்டன. ஆனால், தேர்தல் பத்திரங்கள் அமலாக்கப்பட்ட பின்னர் நிறுவனங்களோ, தனி நபர்களோ காசோலையாக மட்டுமே அதனை அளிக்க வேண்டியிருந்தது” என்றார்.
மேலும், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா கட்சி பெருமளவில் ஆதாயம் பெற்றதுபோல் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திகூட “தேர்தல் பத்திரங்கள் உலகின் மிகப் பெரிய கொள்ளை” என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இப்படியெல்லாம் அவருக்கு யார் எழுதிக் கொடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
உண்மையில் பாஜகவுக்கு ரூ.6,000 கோடி தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்தத் தொகை ரூ.20 ஆயிரம் கோடி. அப்படியென்றால் எஞ்சிய ரூ.14 ஆயிரம் கோடி எங்கே சென்றது. எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஈட்டியுள்ள நிதியானது மக்களவையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தோடு சற்றும் ஒத்துப்போகவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சி ரூ.1600 கோடி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ரூ.1400 கோடி பெற்றுள்ளது. பிஆர்எஸ் கட்சி ரூ.775 கோடி பெற்றுள்ளது. திமுக ரூ.649 கோடி பெற்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் திட்டம் அமலான பின்னர் கட்சிகளுக்கான நிதியில் ரகசியம் என்பதே இல்லாமல் போனது. காரணம் நிதி வழங்கியவர், நிதி பெறுபவர் இருவரின் வங்கிக் கணக்கில் நன்கொடை விவரம் இடம்பெறுகிறது. பணமாக தேர்தல் நிதி வழங்கப்பட்ட காலத்தில் ரூ.100-ஐ கட்சிக் கொடுத்துவிட்டு ரூ.1000 வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். காங்கிரஸ் இதை பல ஆண்டுகளாக செய்துவந்தது” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
“விஞ்ஞான முறையில் பாஜக ஊழல்” - நாராயணசாமி குற்றச்சாட்டு: “ஊழலேயே செய்யாத கட்சி என கூறிக்கொள்ளும் பாஜக, தேர்தல் பத்திரம் விவகாரத்தில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளது” என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கனடா: தீ விபத்தில் இந்திய வம்சாவளி குடும்பம் பலி: கனடாவின் ஒன்டோரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago