கவிதா கைது: சந்திரபாபு நாயுடுவின் பழைய பதிவை பகிர்ந்து அமலாக்கத் துறையை சாடிய கேடிஆர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அமலாக்கத் துறையால் கே.கவிதா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரரும் பிஆர்எஸ் கட்சி நிர்வாகியுமான கே.டி.ராமா ராவ் விசாரணை அமைப்பை சாடும் வகையில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பழைய சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 2019-ம் ஆண்டின் அப்பதிவில் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு கண்டித்திருந்தார்.

"கீழே இருப்பதை சந்திராபு நாயுடுகாருவைத் தவிர யாரும் சிறப்பாக போட்டிருக்க முடியாது" என்று குறிப்பிட்டு, கேடிஆர் பகிர்ந்த சந்திரபாபு நாயுடுவின் பதிவு: “2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் பழிவாங்க அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது.

மேலும், தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகாக பாஜக எந்த அளவுக்கும் இறங்கும் என்பதையும் இது காட்டுகிறது. இந்தத் தாக்குதல் தொடுக்கப்படும் நேரமே இங்கே கேள்விக்குரியது. ஏன் இப்போது?" என்று அந்தப் பழைய பதிவில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தெலங்கானா முன்னாள் முதல்வர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரான 45 வயதாகும் கவிதாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி ஏறக்குறைய 2 மாதங்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட கவிதா அங்கு உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே. நாக்பால் முன்னிலையில் அவரை சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

கவிதாவின் கைது சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதம் என்று தெரிவித்துள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த ஹரிஸ் ராவ், இது பிஆர்எஸ் கட்சியையும், கேசிஆர்-ஐயும் சீர்குலைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ள கூட்டுச் சதி என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் கடந்த ஆண்டில் கவிதாவிடம் அமலாக்கத் துறை 3 முறை விசாரணை நடத்தி அவரது பதில்களை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தெலங்கானாவில் சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் பாஜகவுடன் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE