சிஏஏ அமலுக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனம் - இந்தியா நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான அமெரிக்காவின் விமர்சனத்தை இந்தியா நிராகரித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு குறித்து வரையறுக்கப்பட்ட புரிதல் உள்ளவர்களின் கருத்துக்கள் ஏற்கும்படியானது அல்ல.

சிஏஏவை அமல்படுத்துவது குறித்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது, தவறான தகவல்களைக் கொண்டது மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

டிசம்பர் 31, 2014 அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது" என தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது குறித்து, “மார்ச் 11 ஆம் தேதி குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் அறிவிப்பு குறித்த விவரங்களை இந்தியா வெளியிட்டது. இது எங்களுக்கு கவலையளிக்கிறது.

இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதுதான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE