“சூதாட்ட நிறுவனங்கள் மூலம் பாஜக ஆதாயம்” - தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தவ் கட்சி சாடல்

By செய்திப்பிரிவு

மும்பை: "நாட்டின் மிகப் பெரிய ஊழலில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் வாங்கியதன் மூலம் பாஜக ஆதாயம் அடைந்துள்ளது" என்று உத்தவ் தாக்கரே அணி சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்தது. இந்தநிலையில், தேர்தல் பத்திங்கள் திட்டத்தின் மூலம் பாஜக பெரும் லாபமடைந்துள்ளதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், "சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. பின்பு அந்தத் தொகைகள் பாஜகவின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன.

மேகா இன்ஜினியரிங்ஸ் பல்வேறு ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. அதற்கு பிரதிபலனாக லட்சக்கணக்கான ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அந்தத் தொகை பாஜகவின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் தொகைகளை அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கு மாற்றியுள்ளன. நாட்டில் நடந்திருக்கும் மிகப் பெரிய ஊழல் இது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஷா கூறுகையில், "இன்று மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோம் முன்பே இதனை அறிந்திருந்தார்கள். அமலாக்கத் துறை சோதனை நடத்திய சில மணி நேரங்களுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் வாங்கப்படுகின்றன. இந்தத் தொடர்பை நாம் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கூறுகையில், "2ஜி வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தியது போல இந்தத் தேர்தல் பத்திரம் விவகாரத்திலும் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சட்டம் இப்போது எப்படி இதைப் பார்க்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதேபோல் பிஎம் கேர்ஸ்-க்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். எந்தக் கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பது விசாரணைக்கு உரிய விஷயம்” என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரம் அறிய வழிவகை செய்யும் தேர்தல் பத்திர எண்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE