டெல்லி: பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை கடந்த 2019-ல் நிறைவேற்றிய மத்திய அரசு, கடந்த திங்கள் கிழமை அதனை அமல்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத ரீதியாக குடியுரிமை வழங்குவது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், இதில் இஸ்லாமியர்கள் விடுபட்டிருப்பது பாகுபாடானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறி இருந்தார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம் தார்மீக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இண்டியா கூட்டணியும், காங்கிரஸ் கட்சியும் ஆட்சிக்கு வந்தால், இந்தச் சட்டத்தை சந்தேகத்துக்கு இடமின்றி திரும்பப் பெறுவோம். இது எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இந்திய குடியுரிமைக்குள், நமது தேசிய வாழ்க்கைக்குள் மதத்தைப் புகுத்துவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், அண்டை நாடுகளில் இருந்து தஞ்சம் அடைந்தவர்களுக்கு விரைவாக குடியுரிமை வழங்கப்படுவது மிகவும் நல்ல கொள்கை. துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவர்களுக்கு அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பதாக சட்டம் இருந்திருந்தால் நாங்கள் அதனை வரவேற்போம். ஆனால், ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதற்கு என்ன அர்த்தம்? பாகிஸ்தானை நிராகரித்துவிட்டு, இந்தியாவுக்கு வந்தவர்கள்; இந்திய குடியுரிமை பெற விரும்புபவர்கள் முஸ்லிமாக இருந்தால் அவர்களுக்கு இந்தச் சட்டம் குடியுரிமை தர மறுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
» தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்?- எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
» “பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் விளைவு”- ஜெய்ராம் ரமேஷ்
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “பாஜக, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை இச்சட்டம் திறந்து விட்டுள்ளது. இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது; இதற்கான விலையை அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்கள் கொடுக்க வேண்டியதாக இருக்கும். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் ஏற்கெனவே அசாமின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளது. தற்போது பாஜக இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்க விரும்புகிறது.
பாகிஸ்தானியர்களை இந்தியாவில் குடியேற்றுவதற்கு அரசின் பணம் பயன்படுத்தப்படும். பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் சுமார் 2.5 முதல் 3 கோடி பேர் வரை சிறுபான்மையினர்களாக உள்ளனர். இந்தியா தனது கதவுகளைத் திறந்தவுடன் அந்த நாடுகளில் இருந்து அந்த மக்கள் இந்தியாவுக்குள் வருவார்கள். அவ்வாறு வரும் அகதிகளுக்கு யார் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவார்கள். பணவீக்கமும், வேலையில்லாதிண்டாட்டமும் இன்று நாடு சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள்.
அதிகரித்து வரும் பணவீக்கத்தால் குடும்பத்தை நடத்துவதே சிரமமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்துவது ஏமாற்றமளிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களின் எதிர்ப்புக்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பயனடையும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் திரண்ட அவர்கள், அசோகா சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். கைகளில் இந்திய தேசியக் கொடியுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி காங்கிரஸ் தலைமையகத்தை நோக்கி விரைந்தனர். அப்போது, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago