காங்கிரஸுக்கே விளவங்கோடு பேரவை தொகுதி

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கும் தொகுதி விளவங்கோடு. இத்தொகுதியில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் விஜயதரணி. இவர் சமீபத்தில், பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். எனவே, தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் இந்த தொகுதிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்க திமுக முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொருத்தவரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம் என 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை உள்ளடக்கியே கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் அமைந்துள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், நாகர்கோவிலில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், பத்மநாபபுரத்தில் திமுகவும், கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.

இதில் விளவங்கோடு தொகுதியில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியே அதிக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்பதால், மீண்டும் அக்கட்சிக்கே இந்த தொகுதியை வழங்க திமுக முடிவெடுத்துள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE