அர்விந்த் கேஜ்ரிவால் வீடு அருகில் இந்து, சீக்கிய அகதிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அமல்படுத்தியது. இதுகுறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்திம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையின ஏழை மக்களை சிஏஏ மூலம் இந்தியாவில் குடியமர்த்தி, தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்க பாஜக விரும்புகிறது.மேலும் இங்கு குடியேறுவோருக்கு வேலைவாய்ப்பும் வீடும் வழங்கப்படும் என்பதால் அது உள்ளூர் மக்களை பாதிக்கும்" என்றார்.

இந்நிலையில், கேஜ்ரிவால் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில்வசிக்கும் இந்து மற்றும் சீக்கியஅகதிகள் நேற்று சந்த்கிராம் அகாராஅருகில் திரண்டனர். அவர்கள்சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள கேஜ்ரிவால் வீடு நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இவர்களை கேஜ்ரிவால் வீட்டுக்கு அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே போராட்டம் நடத்தினர்.

கேஜ்ரிவால் தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும், மன்னிப்புகேட்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் கூறும்போது, “எங்கள் வலியை கேஜ்ரிவால் புரிந்து கொள்ளவில்லை. நரேந்திரமோடி அரசு எங்களுக்கு குடியுரிமை வழங்கும் வேளையில் யார் எங்களுக்கு வேலையும் வீடும் தருவார்கள் என கேஜ்ரிவால் கேட்கிறார்” என்றார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அர்விர்ந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கிடையில் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை 2 மனுக்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் வரும் 16-ம் தேதிஆஜராகி விளக்கம் அளிக்க கேஜ்ரிவாலுக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE