புதுடெல்லி: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த 18,626 பக்க அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராம்நாத் கோவிந்த் குழு சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய அரசமைப்பு சட்டத்தின்கீழ் முதல் பொதுத் தேர்தல் 1952-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அது முதல் 1967 வரை மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆட்சிக் கவிழ்ப்பு உள்ளிட்ட காரணங்களால் சில மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.
தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுகின்றன. இதனால், அரசுக்கு அதிக செலவாகிறது. தேர்தல் பணிகளை மேற்கொள்ள அரசு ஊழியர்களின் நேரமும் விரயமாகிறது. எனவே மக்களவை, மாநிலசட்டப்பேரவைகள், ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தை மத்திய பாஜக அரசு முன்வைத்தது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்), மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தைஅமல்படுத்தவே குழு அமைத்துள்ளனர். ஆலோசிப்பதற்காக அல்ல. எனவே, இதில் உறுப்பினராக தொடர விரும்பவில்லை’’ என்று கூறி, இக்குழுவில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியேறினார்.
18,626 பக்க அறிக்கை: தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான பணிகளை மேற்கொண்ட குழு, இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் நேற்று சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு வழங்கியுள்ளது. அதன் விவரம்:
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது சாத்தியமே. தேர்தலுக்கு முன்னரே சிறப்பாக திட்டமிட்டால் இந்த முறையை செயல்படுத்த முடியும். மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திவிட்டு, அதில் இருந்து 100 நாட்களுக்குள் நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தலாம்.
மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை: மாநில தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துபேசி, பொதுவான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’என்பதற்கேற்ப, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மாநிலங்களின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை.
தொங்கு சட்டப்பேரவை அமைந்தாலோ, நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கலைந்தாலோ, மீண்டும் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அந்த ஆட்சி, மத்தியில் இருக்கும் அரசின் ஆட்சிக் காலம் வரை மட்டுமே தொடர முடியும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை உயர்நிலை குழு வழங்கியுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து 62 அரசியல் கட்சிகளிடம் இக்குழு கருத்து கேட்டது. அதில், 47 கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. அவற்றில் 32 கட்சிகள் ஆதரவும், 15 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. 15 கட்சிகள்எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தேசியகட்சிகளில் பாஜக, அதன் கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆகிய 2 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. பிராந்திய கட்சிகளில் அதிமுக, பிஜு ஜனதா தளம், சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 4 தேசிய கட்சிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, என்பிஎஃப், இந்திய கம்யூனிஸ்ட், ஏஐயுடிஎஃப், ஏஐஎம்ஐஎம் ஆகியபிராந்திய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பாரத ராஷ்டிர சமிதி, இந்திய முஸ்லிம் லீக், மதச்சார்பற்ற ஜனதாதளம், கேரள காங்கிரஸ் (எம்), தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட 15 கட்சிகள் கருத்து தெரிவிக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago