விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டத்தால் மத்திய டெல்லியில் போக்குவரத்து நெரிசல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி எல்லையில் டிராக்டர்களுடன் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் அமைப்பினர், டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் மகாபஞ்சாயத்து கூட்டம் நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். 5,000 பேருக்கு மிகாமல் மகா பஞ்சாயத்து கூட்டம் நடத்தி கொள்ள போலீஸார் அனுமதி வழங்கினர்.

ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி மற்றும் டிராக்டர் பேரணி நடத்தக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி டெல்லி ராம் லீலா மைதானத்தில் விவசாயிகள் நேற்றுமகா பஞ்சாயத்து கூட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்குஎதிராக விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

இதில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா(எஸ்கேஎம்) தெரிவித்துள்ளது.

ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தால் மத்திய டெல்லி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் மத்திய டெல்லி நோக்கி சாலைகளில் வாகனங்களில் செல்வதை தவிர்க்கும்படியும், மெட்ரோரயில்போக்குவரத்தை பயன்படுத்தும்படியும் பொதுமக்களுக்கு போலீஸார் அறிவுரை வழங்கினர். டெல்லி கேட் உட்பட பல பகுதிகளில் நேற்று போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. இதனால் பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இந்த கூட்டத்தை முன்னிட்டு டெல்லியின் எல்லைப் பகுதிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் டிராக்டர் டிராலியுடன் டெல்லி செல்லக் கூடாது என விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE