தேவகவுடா குடும்பத்துக்கு 3 தலைமுறையாக ‘டஃப்’... ஷ்ரேயஸ் படேல் யார்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

By ஷாலினி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் கோட்டையான ஹாசன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களம் காணும் ஸ்ரேயஷ் படேல் குறித்து பார்ப்போம். தாத்தா புட்டசாமி கவுடாவின் பாணியில் தேவகவுடா குடும்பத்தை எதிர்த்து நின்று வெற்றி வாகை சூடுவார் என கர்நாடக மாநில காங்கிரஸில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹாசன் மாவட்டத்தையும், தேவகவுடா குடும்பத்தையும் கர்நாடகா அரசியலில் இருந்து பிரிக்கவே முடியாது என்று கூறலாம். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் சொந்த ஊர், ஹாசனில் உள்ள ஹொளேநரசிபுரா ஆகும். அதனால் அந்தத் தொகுதியில் தேவகவுடா குடும்பத்தினரின் ஆதிக்கம் சற்று ஆழமாகவே இருக்கும். ஹாசன் தொகுதி வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலை எதிர்த்து, தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா களமிறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஹாசன் மக்களவைத் தொகுதி எட்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், இரண்டாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் காங்கிரஸ் பெரும் தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில், கர்நாடக அரசியல் களத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார் புட்டசாமி கவுடாவின் பேரன் ஸ்ரேயஷ் படேல்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி புரிந்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக - ஜேடிஎஸ் கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இக்கட்சிகள் அனைத்தும் மக்களவைத் தேர்தலில் களம் காணவிருக்கின்றன். ஹாசன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேல் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அவரின் பின்புலம் பற்றி அலசுவது முக்கியமானதாக இருக்கிறது.

புட்டசாமி கவுடா Vs தேவகவுடா: 1990 காலகட்டங்களில் ஹாசனில் தேவகவுடா குடும்பத்தை எதிர்க்க ஒரு ஆள் கூட இல்லை என கர்நாடக மாநிலமே வாயில் கை வைத்தது. ஆனால், அதனை தவிடுபொடியாக்கினார் காங்கிரசின் புட்டசாமி கவுடா. புட்டசாமி கவுடாவுக்கு 1985-ஆம் ஆண்டு தேவே கவுடாவை எதிர்த்து போட்டியிட காங்கிரஸில் சீட் வழங்கப்படவில்லை. ஆனால், புட்டசாமி கவுடா சுயேட்சையாக நின்று தேவகவுடாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர், 1989 சட்டமன்றத் தேர்தலிலும், 1999 மக்களவைத் தேர்தலிலும் தேவகவுடாவை தோற்கடித்து வரலாற்று சாதனைப் படைத்தார்.

அதன் பிறகு தேவகவுடாவின் மகன் ஹர்தனஹள்ளி தேவகவுடா ரேவண்ணாவை எதிர்த்து 1994, 2004-இல் ஹோலனர்சிபூர் சட்டமன்றத் தொகுதியில் புட்டசாமி கவுடா, போட்டியிட்டார். ஆனால் இரண்டு முறையும் ரேவண்ணா தான் வெற்றி கனியை புசித்தார். தேவகவுடாவின் மூத்த மகனும், முன்னாள் கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமியின் அண்ணன்தான் இந்த ஹர்தனஹள்ளி தேவகவுடா ரேவண்ணா. அதனையடுத்து, 2006-இல் புட்டசாமி கவுடா இயற்கை எய்தினார்.

அதன் பிறகும் அந்தக் குடும்பத்துக்குள்ளான அரசியல் போர் முடிவுக்கு வரவில்லை. புட்டசாமி கவுடாவின் மருமகள் எஸ்.ஜி.அனுபமா 2008 மற்றும் 2013 சட்டமன்றத் தேர்தல்களில் ரேவண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டு முறையும் தோல்வியடைந்தார். இரண்டு தலைமுறையாக இருந்த அரசியல் யுத்தம் நீடித்தது. 2019-ஆம் ஆண்டு தேவகவுடா தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக ஹாசன் மக்களவைத் தொகுதியை விட்டுக் கொடுத்தார். அதன்மூலம் மூன்றாம் தலைமுறையினர் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெற்றனர்.

யார் இந்த ஸ்ரேயஷ் படேல்? - தேவகவுடா, அவரது மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் என ஹாசனில் ஹொளேநரசிபுராவில் தலைமுறை தலைமுறையாக வெற்றி பெற்று வருகின்றனர். இதனால் ஹாசன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டை என்றே அழைக்கப்பட்டு வருகிறது. தற்போதும் ஹாசன் மாவட்டத்தில் தேவகவுடா, புட்டசாமி கவுடா குடும்பங்களுக்கு இடையில், யார் பெரியவர் என்ற மோதல் போக்கு இன்னும் நீடித்து வருகிறது.

புட்டசாமி கவுடா குடும்பத்தினரின் சகாப்தம் முடிந்து விட்டது என்று தேவகவுடா குடும்பத்தினர் நினைத்து கொண்டிருக்க, அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அரசியலில் களம் கண்டுள்ளார் புட்டசாமி கவுடாவின் பேரன் ஸ்ரேயஷ் படேல். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவுக்கு ஷாக் கொடுத்தார் ஸ்ரேயஷ் படேல்.

முன்னாள் அமைச்சரும், ஐந்து முறை எம்எல்ஏ-வாகவும் இருந்த ரேவண்ணா அரசியல் செல்வாக்கு மிகுந்தவர். பொதுவாகவே லட்சங்கள், பல ஆயிரங்கள் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று வந்த ரேவண்ணா, கடந்த தேர்தலில் சொற்பமாக வெறும் 3,152 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

அது அரசியல் களத்தில் ஸ்ரேயஷ் படேலுக்கு கூடுதல் வரவேற்பை கொடுத்தது. தேர்தல் சமயங்களில் ஸ்ரேயஷ் படேல் பம்பரமாய் சுழன்றது, அவரின் தேர்தல் வியூகங்கள், அயராத உழைப்பு, காங்கிரஸ் தலைமையிடத்திலும் அவருக்கு நன் மதிப்பை கூட்டியது. கொஞ்சம் அசந்திருந்தால், ரேவண்ணா கண்களில் ஸ்ரேயஷ் படேல் கைகளை விட்டு ஆட்டியிருப்பார் என அரசியல் களமே அதிர்ந்தது.

தற்போது காங்கிரஸ் கட்சியினர் பயங்கர மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தேவகவுடாவை புட்டசாமி கவுடா தோற்கடித்தது போல, ஹாசனில் தேவகவுடா பேரன் பிரஜ்வல் போட்டியிட்டால், அவரை ஸ்ரேயஷ் படேல் தோற்கடிப்பார் என்று காங்கிரஸ் முழு மூச்சாக நம்புகிறது. அதற்கான எதிர்பார்ப்பும் எகிறி உள்ளது. இதனால் இந்தத் தேர்தலில் ஹாசன் தேர்தல் களம் சற்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 31 வயதான ஷ்ரேயாஸ் படேல் ஹாசனின் ஜில்லா பஞ்சாயத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அரசியலில் என்ட்ரி கொடுத்தார்.

பிரஜ்வல் ரேவண்ணா: பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவை உறுப்பினராகவும், இந்தியாவின் 3வது இளைய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், சில ஆண்டுகள் அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது, பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்கள் மனதில் பதிந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 1,41,324 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயஷ் படேலை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டால் யார் வெற்றியடைவார் என்ற என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக தேவகவுடாவே பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. தாத்தா, அப்பா, பேரன் என தலைமுறை தலைமுறையாக நீடித்து வரும் அரசியல் யுத்தம் எவ்வாறு இருக்கப் போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முந்தைய அத்தியாயம்: பாஜகவின் கேரள ‘நம்பிக்கை’... யார் இந்த அனில் அந்தோணி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்