‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழு பரிந்துரை அம்சங்கள் - எதிர்க்கும் கட்சிகளும் காரணங்களும்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளது. இந்த யோசனை தொடர்பாக 47 அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தன. அவற்றில் 32 கட்சிகள் இந்த யோசனைக்கு ஆதரவாகவும், 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்ததாக ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளில் இரு கட்சிகள் மட்டுமே தேசியக் கட்சிகள். அவற்றில் ஒன்று பாஜக, மற்றொன்று தேசிய மக்கள் கட்சி. இக்கட்சி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் அங்கமாகும். தேசிய கட்சிகளாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற 4 கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிக்கவில்லை. முன்னதாக, மொத்தம் நாடு முழுவதும் 62 அரசியல் கட்சிகளிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டு, 18 கட்சிகளிடம் நேரடி ஆலோசனையும் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரிக்கும் கட்சிகளின் விவரம்: பாஜக, என்பிபி கட்சிகளைத் தவிர இந்தத் திட்டத்துக்கு அதிமுக, பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான ஏஜெஎஸ்யு (AJSU), அப்னா தளம், அசாம் கன பரிஷத், லோக் ஜனசக்தி கட்சி (R), தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - நாகலாந்து (R), சிக்கிம் கிரந்திகாரி மோர்சா, மிசோ தேசிய முன்னணி, ஐக்கிய ஜனதா தளம், யுனைடட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் ஆஃப் அசாம், பிஜு ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அகாலி தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்க்கும் கட்சிகள்: ஏஐயுடிஎஃப், திரிணமூல் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, நாகா மக்கள் முன்னணி (NPF), சமாஜ்வாதி உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இவை தவிர பாரத் ராஷ்ட்ர சமிதி, ஐயுஎம்எல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, கேரளா காங்கிரஸ் (M), தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இவற்றில் தெலுங்கு தேசம் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள் சில: 18,626 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், 2023 செப்டம்பர் 2 அன்று குழு அமைக்கப்பட்டதில் இருந்து 191 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள், தொடர்புடையவர்கள், நிபுணர்களுடனான விரிவான ஆலோசனைகள் குறித்து இடம்பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினரை இக்குழு சந்தித்து கருத்துக்களைப் கேட்டறிந்து விரிவான ஆலோசனைகளை நடத்தியது. 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பித்தன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பிற்கு, நாடு முழுவதிலுமிருந்து 21,558 பதில்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தனர்

இந்தியாவின் நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், பன்னிரண்டு பெரிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற சட்ட வல்லுநர்கள் இந்த குழுவால் நேரில் அழைக்கப்பட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்தும் கேட்கப்பட்டது. சி.ஐ.ஐ., ஃபிக்கி, அசோசெம் போன்ற உயர்மட்ட வணிக அமைப்புகள் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் பல தேர்தல்களின் பொருளாதார விளைவுகள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்: டெல்லியில் நேற்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாகவும் அதில் 19 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டதாகவும் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த 19 கட்சிகளில் 16 கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், 3 கட்சிகள் மட்டுமே எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றதில் சிபிஎம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் அறிக்கையில் தகவல் இடம்பெற்றுள்ளது. மொத்த 47 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட, அதில் 19 கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளன.

ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்னென்ன? - 18,626 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கை 191 நாட்கள் முயற்சிக்குப் பின்னர் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரே நாடு ஓரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் அது வளர்ச்சியையும், சமூக இணக்கத்தையும் மேம்படுத்தும். இந்தியாவின் கனவு நனவாக வழிவகுக்கும் என்று ராம்நாத் கோவிந்த் குழு தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்தக் குழுவானது ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் ஒரே மாதிரியான வாக்காளர் அட்டையும் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்படுவது அவசியம் என பரிந்துரைத்துள்ள ராம்நாத் கோவிந்த் குழு, அவ்வாறு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அதேவேளையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. மக்களவை,சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி முடித்தாலும் அது முடிந்த பின்னர் 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆம் ஆத் கட்சி கருத்து: டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி இந்தக் குழுவிடம், ‘ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தினால் அது ஜனநாயகத்தை மட்டுப்படுத்தும். இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும். நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானதாக அமையும். அதிபர் ஆட்சி முறையை உருவாக்கும். அப்படியான ஆட்சியை நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஒன்றும் செய்ய இயலாது’ என்று தெரிவித்தது.

காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி, ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது என்பது அரசமைப்பின் அடிப்படையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானதாக அமையும். கூட்டாட்சி அளிக்கும் வாக்குறுதிகளை சிதைக்கும். மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது என்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தலை அமலாக்க நினைப்பது அடிப்படையற்றது’ என்றது.

பகுஜன் சமாஜ் கட்சி: பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் திட்டத்துக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்கைவ்ல்லை. ஆனால், நாட்டின் மக்கள் தொகையை, பரப்பளவை கடுத்தில் கொண்டு இதை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றி ஆராய உயர்மட்ட குழு அமைக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘இந்தத் திட்டம் அடிப்படையிலேயே ஜனநாயக விரோதமானது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளது. அரசமைப்பில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறையை அழிக்கக் கூடியது என்று அக்கட்சி சாடியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ்: இந்த ஆண்டு தொடக்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது கருத்தை ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தெரிவித்தது. அதில், ‘அரசமைப்பு வழங்கிய கூட்டாட்சி கட்டமைப்புக்கும், அடிப்படை தேர்தல் கோட்பாடுகளுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை எதிரானது’ என்று தெரிவித்துள்ளது. மேலும், ‘இது மாநிலங்களை முன் கூட்டியே தேர்தலை சந்திக்க நிர்பந்திக்கும் செயலாகும். அவ்வாறு செய்தல் மாநில பிரச்சினைகளை நசுக்குவதுபோல் அமையும்’ என்று தெரிவித்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சி: அசாதுதீன் ஓவைசியின் அனைத்து இந்திய மஸ்லிஸ் இ இதேஹதுல் முஸ்லிமீன் கட்சியானது, இப்படியாக அடிப்படை அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வழிவகை என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதாகக் கூறியுள்ளது. மேலும், ‘தேர்தல்கள் என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல. வாக்காளர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்புகளாகக் கருதக் கூடாது. இந்திய அரசமைப்பின் மிகப் பெரிய தூணாக தேர்தல் ஜனநாயகம் இருக்கின்றது. அதை சிதைத்துவிடக் கூடாது’ என வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலுக்கு வந்தால் அது ஜனநாயகத்தை மட்டுப்படுத்தும், மாநில உரிமைகளை சிதைக்கும். இவ்வாறான யோசனையை முன்வைத்தே ஒரே கட்சி முறையை நோக்கி தேசத்தை நகர்த்துவதே ஆகும்’ எனத் தெரிவித்துள்ளது.

திமுக: கடந்த ஜனவரி 16-ஆம் தேதி திமுக இது தொடர்பாக ராம்நாத் கோவிந்த் குழுவுக்கு கடிதம் எழுதியது. மேலும், பிப்ரவரி 10-ல் நேரில் ஆஜராகியது. ‘ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது மாநில அரசுகளை முன் கூட்டியே கலைக்கச் செய்ய வழிவகுக்கும். இது அரசமைப்புக்கு எதிரானது. இத்தகைய உயர் மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்ததே சட்டவிரோதமானது. மத்திய அரசுக்கு இதில் என்ன அதிகாரம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும்’ என்றது.

நாகா மக்கள் முன்னணி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி அமைப்பின் ஆன்மாவை தோற்கடிக்கச் செய்யும். பிராந்திய, உள்ளூர் பிரச்சினைகளை மழுங்கடிக்கச் செய்யும். அரசியலமைப்பை இவ்வாறாக திருத்த அனுமதிக்க இயலாது’ என்று தெரிவித்தது.

சமாஜ்வாதி கட்சி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல் அமலுக்கு வந்தால் மாநிலப் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினைகள் மழுங்கடித்துவிடும். மாநிலக் கட்சிகளால் தேசியக் கட்சிகளோடி போடியிட இயலாது. தேர்தல் உத்தியாகட்டும், செலவினங்களாக இருக்கட்டும் எதிலுமே மாநிலக் கட்சிகளால் தேசியக் கட்சியை நெருங்கவே இயலாத சூழல் உருவாகிவிடும்’ என்று சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்