தேர்தல் பத்திர விவகாரம் | உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இன்று (புதன்கிழமை) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாகவும், பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பிரமாணப் பத்திரத்தில் உள்ளது என்ன?: உச்ச நீதிமன்றம் இந்தத் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு, ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை ஆக்கியுள்ளன. இதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) தேர்தல் ஆணையத்தின் வேலை நேரம் முடிவதற்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் எஸ்பிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி விவரங்களை எஸ்பிஐ சமர்ப்பித்தது. இதனை தேர்தல் ஆணையமும் உறுதி செய்தது.

“நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது” என எக்ஸ் தளத்தில் தேர்தல் ஆணையம் பதிவிட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய நகல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் 2018-ல் நடைமுறைக்கு வந்தது. இதனை குறிப்பிட்ட சில வங்கிக் கிளைகளில் மட்டுமே எஸ்பிஐ விற்பனை செய்து வந்தது. ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரையில் இந்த பத்திரங்கள் பல்வேறு மதிப்புகளில் விற்பனை செய்யப்பட்டன.

அந்த வகையில் 6 ஆண்டு காலம் விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை சுமார் 30 பிரிவுகளாக தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.16,518 கோடி எனத் தெரிகிறது. எஸ்பிஐ சமர்ப்பித்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ம் தேதிக்குள் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE