எடியூரப்பா மகன் Vs பங்காரப்பா மகள்: ஷிமோகாவில் ஜெயிக்கப்போவது யாரு?

By இரா.வினோத்


மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் இரு முன்னாள் முதல்வர்களின் வாரிசுகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் வெற்றி வாகை சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும், முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளுமான கீதா கடந்த ஆண்டு மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என கர்நாடக கல்வி அமைச்சரும், சகோதரருமான மது பங்காரப்பா காங்கிரஸ் மேலிடத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம், கீதாவை ஷிமோகா வேட்பாளராக அறிவித்துள்ளது.

எடியூரப்பாவின் கோட்டை: பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான எடியூரப்பாவின் கோட்டையாக விளங்குகிறது ஷிமோகா தொகுதி. இங்கு, கடந்த 20 ஆண்டுகளாக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பாஜகவே ஆதிக்கம் செலுத்துகிறது.

இங்கு, 2009-ல் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, 2014-ல் எடியூரப்பா, 2019-ல் ராகவேந்திரா வெற்றி பெற்று எம்.பி.யானார்கள். 2009 தேர்தலில் ராகவேந்திராவிடம் முன்னாள் முதல்வர் பங்காரப்பா தோல்வி அடைந்தார்.

2014 தேர்தலில் எடியூரப்பாவிடம் மஜத சார்பில் போட்டியிட்ட கீதா தோல்வி அடைந்தார்.இந்நிலையில், ஷிமோகாவில் வெல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன், காங்கிரஸ் மேலிடத்துடன் பேசி தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார் கீதா.

தம்பி உடையாள்: ஷிமோகாவில் பாஜக சார்பில் இம்முறையும் ராகவேந்திரா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை வீழ்த்துவதற்கு தனது தம்பியும், அமைச்சருமான‌ மது பங்காரப்பாவின் செல்வாக்கை பயன்படுத்த கீதா திட்டமிட்டுள்ளார்.

அவர் ஷிமோகா தொகுதிக்குட்பட்ட சொரபா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். அங்கு அவருக்கு செல்வாக்கு இருப்பதால், அதனை வைத்து ராகவேந்திராவை வீழ்த்த கீதா வியூகம் அமைத்துள்ளார்.அதேபோல கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் தனது கணவர் சிவராஜ்குமாரை முழு வீச்சில் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் பங்கரப்பா மற்றும் எடியூரப்பாவின் வாரிசுகள் மோதும் ஷிமோகாவில் 'யார் வாகை சூடுவார்?' என்ற எதிர்ப்பார்ப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE