மேலும் 90 வேட்பாளர்கள் தேர்வு? - பாஜக வட்டாரங்கள் தகவல்

By செய்திப்பிரிவு

பாஜகவின் மத்திய தேர்தல் குழுவின் (சிஇசி) இரண்டாவது கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கட்சியின் சார்பில் போட்டியிடும் 90 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிஇசி கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, பிஹார், இமாச்சல பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, நித்யானந்த் ராய் மற்றும் சுஷில் மோடி, கிஷண் ரெட்டி போன்ற முக்கிய தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

குஜராத்தில் 11 இடங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்வதை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றதாக தெரிகிறது. ஏழு வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் ஐந்தில் நான்கு இடங்களுக்கான பேச்சுவார்த்தை ஒருமித்த கருத்துடன் முடிவடைந்தன.

அதேநேரம், மகராஷ்டிராவில் 25 இடங்களுக்கும், தெலங்கானாவில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 28 இடங்களுக்கும் வேட்பாளர்கள் குறித்து விவாதிப்பது என்பது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருந்தது. இருப்பினும், தமிழ்நாடு, பிஹார் மற்றும் ஒடிசாவில் நடந்து வரும் கூட்டணி பேச்சுவார்தைகளால் இந்த மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜக தனது 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை மார்ச் 2-ல் வெளியிட்டது. அதன்படி, பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வாராணசியில் போட்டியிடுகிறார். மேலும், இந்தப் பட்டியலில் மத்திய மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 34 அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் முதல்வர்கள் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE