காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்: முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 8-ம் தேதி காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியானது.

இதில் தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம் மாநிலங்களில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 43 மக்களவைத் தொகுதிகளுக்கான காங்கிரஸின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் பட்டியலை வெளியிட்டனர்.

அசாமில் 12, குஜராத்தில் 7, மத்திய பிரதேசத்தில் 10, ராஜஸ்தானில் 10, உத்தராகண்டில் 3, டையூ டாமனில் ஒரு தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 13 பேர் ஓபிசி, 10 பேர் எஸ்சி, 9 பேர் எஸ்டி சமூகங்களை சேர்ந்தவர் கள் ஆவர். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத், அந்த மாநிலத்தின் சிந்த்வாரா மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் அந்த மாநிலத்தின் ஜலோர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய் அசாமின் ஜோர்ஹாட் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE