பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணைய தளம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிஏஏ சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

சிஏஏ சட்டத்தின்படி குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் @சிஏஏ-2019’ என்ற செயலி அறிமுகம் செய்யப்படும்.

இந்திய குடியுரிமைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும். யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் புதிய இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிஏஏ சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 30,000 அகதிகளுக்கு உடனடியாக குடியுரிமை கிடைக்கும். இதன்படி 25,447 இந்துக்கள்,5,807 சீக்கியர்கள், 55 கிறிஸ்தவர்கள், 2 புத்த மதத்தினர், 2 பார்சிகள் குடியுரிமையைப் பெறுவார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை மற்றும் வங்கதேச போரின்போது, வங்கதேசத்தில் இருந்து மாத்துவ சமுதாயத்தை சேர்ந்த இந்துக்கள் மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடியேறினர். சமீபத்திய புள்ளிவிவரத் தின்படி இந்தியாவில் மாத்துவ சமுதாயத்தை சேர்ந்த சுமார் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். இதில் மேற்குவங்கத்தில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர்.

அவர்களில் 1.5 கோடி மட்டுமே குடியுரிமை பெற்றுள்ளனர். மீதமுள்ள 1.5 கோடி பேருக்கு இன்னமும் குடியுரிமை கிடைக்கவில்லை. சிஏஏ சட்டத்தின் மூலம் அவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். இந்தசமுதாய மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் குடியுரிமை வழங்க காலஅவகாசம் தேவைப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மாத்துவ சமுதாய மக்கள் கூறும்போது, “குடியுரிமை சட்டத்தில் பல்வேறு கடினமான விதிகள் இருந்தன. இதன் காரணமாக எங்களால் இந்திய குடியுரிமை பெறமுடியாத சூழல் நிலவியது. புதியசிஏஏ சட்டத்தில் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எங்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்கும். இது எங்களுக்கு கிடைத்த 2-வது சுதந்திரம்’’ என்று தெரிவித்தனர்.

மேற்குங்கத்தில் மாத்துவ சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகள்திருவிழா கோலம் பூண்டுள்ளன.சிஏஏ சட்டம் அமல் செய்யப்பட்டிருப்பதை வரவேற்று அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE