மக்களவை தேர்தலுடன் காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும்: தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: மக்களவை தேர்தலுடன், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஜம்மு காஷ்மீரில் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி, பாஜக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இது குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் நசீர் அஸ்லாம் வாணி கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினோம். கடந்த 10 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை இழந்துள்ளனர் என்பதை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம்.

இரண்டு தேர்தலையும் ஒரே ஆண்டில் தனித்தனியாக நடத்தினால் ஜம்மு காஷ்மீர் பொருளாதாரம் பாதிப்படையும். இங்கு சுற்றுலாத்துறை நன்றாக உள்ளது. அதிக சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வருவர்என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அதனால் இரு தேர்லை தனித்தனியாக நடத்தினால் பொருளாதாரம் நிச்சயம் பாதிக்கும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது பிரதமரின் கனவாக உள்ளது. அதை ஏன் ஜம்மு காஷ்மீரில் இருந்து தொடங்க கூடாது? தேர்தல் நியாயமாக நடைபெறும் சூழலை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கூறியதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பொறுமையுடன் கேட்டனர். இனி முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிடிபி தலைவர் குலாம் நபி லோன் ஹன்ஜூரா கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என எங்கள் கட்சியும் வலியுறுத்தியது’’ என்றார்.

பாஜக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பதானியா கூறுகையில், ‘‘ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. ஆனால், ஜம்மு காஷ்மீர் மக்களை முட்டாள்களாக்க, தேசிய மாநாட்டு கட்சி, பிடிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பொய் தகவலை பரப்பி வருகின்றன. காஷ்மீர் பன்டிட்டுகள் வாக்களிக்க வசதியாக ஜம்மு காஷ்மீருக்கு வெளியே அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்குச் சாவடிகளை அமைக்க வேண்டும்’’ என்றார்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியபின், ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி பி.கே.போல், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.க்களுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தினர். இதேபோன்ற ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெறுகிறது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்களும், மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த வேண்டும் என கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE