ஹரியாணாவில் மனோகர் லால் கட்டார் திடீர் ராஜினாமா: புதிய முதல்வரானார் நயாப் சிங் சைனி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று காலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மாலையில் நயாப் சிங் சைனி (54) புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

ஹரியாணாவில் பாஜக மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராகவும் ஜேஜபி தலைவர் துஷ்யந்த்சவுதாலா துணை முதல்வராகவும் பதவி வகித்தனர். இந்நிலையில்,வரும் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு எட்டப்படாததால், பாஜக கூட்டணியில்இருந்து விலகுவதாக ஜேஜேபி நேற்று அறிவித்தது.

இதையடுத்து, முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் பாஜக பொதுச் செயலாளர் தருண் சிங் ஆகிய இருவரையும் கட்சித் தலைமை சண்டிகருக்கு அனுப்பி வைத்தது.

கட்சியின் மேலிட பார்வையாளர்கள் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் முதல்வர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்கலாம் என கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குருஷேத்ரா மக்களவை தொகுதிஎம்.பி.யும் கட்சியின் மாநில தலைவருமான நயாப் சிங் சைனி சட்டப்பேரவைக் குழு தலைவராகஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நயாப் சிங் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து, நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நயாப் சிங் சைனி ஹரியாணா மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நயாப் சிங் சைனி ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர் (சைனி). ஹரியாணா மக்கள் தொகையில் 8% பேர் சைனி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எனவே, ஓபிசி சமூகவாக்குகளை குறிவைத்துசைனிக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடனான கூட்டணியை ஜேஜேபி முறித்துக் கொண்டாலும் பாஜக அரசுக்கு சுயேச்சைகள் ஆதரவு இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என கூறப்படுகிறது. ஹரியாணாவில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. இதில் பாஜக வசம் 41 இடங்கள் உள்ளன. மேலும் ஹரியாணா லோகித் கட்சியின் 1 மற்றும் 6 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் மொத்த பலம் 48 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE