‘மத்திய அரசின் சாதுர்யம்’ - சிஏஏ அமலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஐயுஎம்எல் முறையீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் சிஏஏ அமலாக்கத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முறையீடு செய்துள்ளது. அதில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமது தரப்பில் சிஏஏ-வுக்கு தடை கோரப்பட்டதாகவும், ஆனால் அப்போது மத்திய அரசு அந்தச் சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவே இல்லை எனக் கூறி தடையாணையை சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டுவிட்டு இப்போது சத்தமே இல்லாமல் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 250 வழக்குகள் உள்ளன. அவற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழக்கே முதன்மையானது. பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு திடீரென விதிமுறைகளை வகுத்து சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்று ஐயுஎம்எல் இன்று தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளது. முஸ்லிம்கள் குடியுரிமை கோர இயலாத வகையில் சட்டத்தில் விதிமுறைகள் உள்ளதால் இச்சட்டத்துகு தடை விதிக்க வேண்டும். பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படாமல் இருக்க தடை வேண்டும் என்று கோரியுள்ளது.

இச்சட்டத்தை எதிர்க்கும் மனு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தரப்பு வழக்கறிஞர்கள் ஹரீஷ் பீரன், பல்லவி பிரதாப் ஆகியோர், “மனுதாரர் இந்த சட்டத்துக்கு முன்னரே தடை கோரியிருந்தார். ஆனால், அப்போது மத்திய அரசு சட்டத்துக்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது. அதனால், அமலுக்குக் கொண்டு வரப்படாது எனவும் கூறியிருந்தது. இந்த ரிட் மனுக்கள் நான்கரை ஆண்டுகளாக தேங்கியுள்ளன” என்று கூறுகின்றனர்.

ஒருவேளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிஏஏ சட்டத்துக்கு தடை கோரி முறையீடு செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், சிஏஏ நடைமுறை தடைபடும்.

’அவசரம் தேவையில்லை’ - ஐயுஎம்எல் மனுவில், “ஏற்கெனவே இங்கு கோடிக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களால் இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அப்படியிருக்க அவர்களை வெளியேற்ற எந்த அவசரமான அவசியமும் இல்லை. சிஏஏ புலம்பெயர்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு எதிரானது அல்ல எனச் சொல்லப்பட்டது.

ஆனால், மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இருக்கிறது. இதன்மூலம் மதச்சார்பின்மை என்ற அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடே அடிபடுகிறது. எனவே நீதிமன்றம் இந்தச் சட்டம் அமலாக்கப்படுவதை முடக்கிவைக்க வேண்டும். இச்சட்டத்தின் விதிமுறைகள் அப்பட்டமாக அரசமைப்புக்கு எதிரானதாக இருக்கின்றது. நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் இதுதொடர்பாக நிலுவையில் இருக்கும் சூழலில் பரந்துபட்ட நன்மையைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தனது முடிவை இறுதி செய்யும் வரை இச்சட்டத்துக்கு அதன் விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்“ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிஏஏ பின்னணி: கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தப் போராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டது. அதன் முழு விவரம்: நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் உடனடியாக அமல்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE