ஹரியாணா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு - மாற்றத்தின் பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

சண்டீகர்: ஹரியாணாவின் முதல்வர் பதவியில் இருந்து மனோகர் லால் கட்டார் செவ்வாய்க்கிழமை காலையில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி மாலையில் பதவி ஏற்றுக்கொண்டார் .ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து ஆளும் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி (ஜெஜெபி) இடையே பிளவு ஏற்பட்ட நிலையில், ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் காலையில் ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில், மனோகர் லால் கட்டார், துணை முதல்வராக இருந்த, ஜெஜெபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா உள்பட அக்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் என 14 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஹரியாணா அரசியல் மாற்றங்களை கண்காணிக்க மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சவுக் ஆகியோரை மேலிடப் பார்வையாளர்களாக பாஜக தலைமை அனுப்பியது.

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மனோகர் லால் கட்டார், பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஹரியாணா இல்லத்தில் கூட்டம் நடத்தினார். இதில் மாநிலத்தின் பாஜக பொறுப்பாளர் பிப்லப் குமார் தெப், மாநில பாஜக தலைவர் நயாப் சைனி, பார்வையாளர்களான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சவுக், முன்னாள் பாஜக மாநில தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் பாராலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், ஹரியாணாவின் பாஜக பொறுப்பாளர் பிப்லாப் தேவ் மற்றும் மனோகர் லால் கட்டார் முன்னிலையில், நயாப் சிங் சைனி பாஜக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் நயாப் சைனி ஹரியாணாவின் புதிய முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பந்தாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் முதல்வர் மனோகர் கட்டாரும் கலந்து கொண்டார். நயாப் சிங் சைனியுடன் பாஜக தலைவர்கள் கன்வர் பால் குஜ்ஜர், ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால் மற்றும் மூல் சந்த் சர்மா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். சுயேட்சை எம்எல்ஏ ரஞ்சித் சிங் சவுதாலாவும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெறத் தவறிய பாஜக 40 இடங்களைப் பெற்றிருந்தது. அதனால் 10 இடங்களைப் பெற்றிருந்த ஜெஜெபியுடன் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. தற்போது இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எனினும், ஹரியாணா பேரவையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் எம்எல்ஏக்களுடன், செல்வாக்கு மிக்கத் தலைவர் கோபால் கந்தா உள்ளிட்ட 6 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இருப்பதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த நியாப் சிங் சைனி? - குருஷேத்திராவின் எம்.பியாக இருக்கும் 54 வயதாகும் நயாப் சிங் சைனி, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் ஹரியாணா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். நயாப் சிங் சைனி தனது அரசியல் பயணத்தை கடந்த 1996-ம் ஆண்டு பாஜகவில் இருந்து தொடங்கினார். ஹரியாணாவின் நிர்வாக அமைப்பில் தொடங்கி படிப்படியாக முன்னேற்றமடைந்தார்.

2002-ம் ஆண்டு அம்பாலாவின் மாவட்ட பாஜக இளைஞர் பிரிவின் செயலாளராக இருந்தார். பின்னர் 2005-ம் ஆண்டு மாவட்டத் தலைவரானார். கடந்த 2014-ம் ஆண்டு நாராயணகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தெடுக்கப்பட்ட நயாப், 2016-ம் ஆண்டு ஹரியாணா அரசின் அமைச்சராவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குருஷேக்த்ரா தொகுதியில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பதிவு செய்தார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 3.83 லட்சம் வாக்குகளில் வெற்றி பெற்றார்.

மனோகர் லால் கட்டாரின் நெருங்கிய கூட்டாளியாக அறிப்படும் நயாப் சைனி, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2014-ம் ஆண்டில் இருந்து ஹரியாணா மாநில அரசியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவர் தனது இளமை காலத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்