ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - பின்னணியில் என்டிஏ கூட்டணி விரிசல்

By செய்திப்பிரிவு

சண்டீகர்: ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்துள்ளது. ஹரியாணா இல்லத்தில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள் உட்பட பாஜக எம்எல்ஏக்களுடன் நடந்த கூட்டத்துக்குப் பின்னர், கட்டார் ராஜ் பவனுக்கு விரைந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து ஆளும் பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி (ஜெஜெபி) இடையே பிளவு ஏற்படலாம் என்ற ஊகத்துக்கு மத்தியில் இந்த ராஜினாமா சம்பவம் நடந்துள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவும், துஷ்யந்த சவுதாலா தலைமையிலான ஜெஜெபி கட்சிகள் தனித்தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.

மொத்தம் 90 உறுப்பினர்கள் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை பெறத் தவறிய பாஜக 40 இடங்களைப் பெற்றிருந்தது. அதனால் 10 இடங்களைப் பெற்றிருந்த ஜெஜெபியுடன் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. தற்போது இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

என்றாலும், ஹரியாணா பேரவையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை பாஜக உறுதிப்படுத்தியுள்ளது. தங்கள் எம்எல்ஏக்களுடன், செல்வாக்கு மிக்கத் தலைவர் கோபால் கந்தா உள்ளிட்ட 6 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இருப்பதாக கோரியுள்ளது.

இந்த நிலையில், ஹரியாணா அரசில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்த பாஜக தலைமை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சவுக் மாநிலத்தின் அரசியல் சூழலை கண்காணிக்க மேலிடப் பார்வையாளர்களாக பாஜக தலைமை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்று மாலை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின்னர் மனோகர் லால் கட்டார், பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்களுடன் ஹரியாணா இல்லத்தில் கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பாகஜ பொறுப்பாளர் பிப்லப் குமார் தெப், மாநில பாஜக தலைவர் நயாப் சைனி, பார்வையாளர்களான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சவுக், முன்னாள் பாஜக மாநில தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுபாஷ் பாராலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெஜெபி தலைவர் இண்டியா கூட்டணியில் இணைவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் பூபேந்திர ஹுடா, "மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவே பாஜக - ஜெஜெபி கூட்டணி உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம். அந்தக் கூட்டணி எதன் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. அவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE