யூசுப் பதானை மாநிலங்களவை உறுப்பினராக்கி இருக்கலாம்: மம்தா முடிவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கண்டனம்

By செய்திப்பிரிவு

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் பஹராம்பூர் தொகுதி வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து யூசுப் பதான் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை ஒலிப்பேன் என்ற நம்பிக்கையுடன் திரிணமூல் காங்கிரஸ் குடும்பத்தில் என்னை சேர்த்துள்ள கட்சித் தலைமைக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 5 முறையாக (1999 முதல் 2019 வரை)) தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த முறையும் அங்கு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில், குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்தவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதான் போட்டியிடுவார் என திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத சவுத்ரி கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சவுத்ரி கூறும்போது, “யூசுப் பதானுக்கு மரியாதையும் அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பதுதான் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றால் அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்திருக்கலாம். அல்லது குஜராத் சார்பில் அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க இண்டியா கூட்டணியின் ஆதரவை கேட்டிருக்கலாம்.

பஹராம்பூர் தொகுதியில் அவரை வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாஜக வேட்பாளருக்குதான் ஆதாயம் கிடைக்கும். காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மம்தா இவ்வாறு செய்துள்ளார். இண்டியா கூட்டணி குறித்த மம்தா பானர்ஜியின் பேச்சும் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE