புதுடெல்லி: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று உடனடியாக அமலுக்குவந்தது. இதுதொடர்பான அறிவிப்பாணையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தபோராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
குடியுரிமை நடைமுறைகள்: சிஏஏ சட்டம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிஏஏ சட்டத்தின்படி யாருக்கு குடியுரிமை வழங்கலாம் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவு முடிவு செய்யும்.சிஏஏ சட்டம் தொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அரசு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
பழைய விதிகளின்படி, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயரும் இந்துக்கள் உள்ளிட்டோருக்கு பாகிஸ்தான் தூதரகத்தின் குடியுரிமை துறப்பு சான்றிதழ் அவசியம். புதிய சட்டம் மூலம் இந்த நடைமுறை நீக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நடைமுறைகளின்படி இந்திய குடியுரிமை கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மத்திய அரசின் உளவுத் துறை, பாதுகாப்பு அமைப்புகளின் விசாரணை, ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு, தகுதி உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
பழைய குடியுரிமை சட்டங்களின்படி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக நுழைந்தவர்கள் 11 ஆண்டுகள் இங்கு வசித்த பிறகே குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும். புதிய சிஏஏ சட்டத்தின்படி இந்த அவகாசம் 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தில் கடந்த 2019 டிசம்பரில் சிஏஏ சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கரோனா பெருந்தொற்று காலம் என்பதால் சட்டத்தின் விதிகளை வரையறுப்பதில் தாமதம் ஏற்பட்டது. சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன. இவை தற்போதும் நிலுவையில் உள்ளன.
மேலும், 2019-ம் ஆண்டில் அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ‘‘இந்த சட்டத்தால் வங்கதேசத்தினருக்கு எளிதாக குடியுரிமை கிடைத்துவிடும். இது அசாம் மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். எனவே சிஏஏ சட்டத்தை அமல்படுத்த கூடாது’’ என்று அந்த மாநில மக்கள் வலியுறுத்தினர். இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிஏஏ சட்டம் அமலாவதில் தாமதம் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் 144 தடை உத்தரவு: சிஏஏ சட்டத்தை எதிர்த்து கடந்த 2019-20-ல் டெல்லி ஷாகின்பாக்கில் நடந்த போராட்டங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதை கருத்தில்கொண்டு, ஷாகின்பாக்கில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி அகில இந்திய அசாம் மாணவர்கள் கூட்டமைப்பினர் திப்ருகரில் நேற்று முன்தினம் 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அரசியல் தலைவர்கள் கருத்து: சமூக வலைதளத்தில் பாஜக நேற்று வெளியிட்ட பதிவில், ‘சிஏஏ உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மோடி அரசு தந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சாதி, மதம், மொழியின் பெயரில் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்துவதை திரிணமூல் அனுமதிக்காது. சில நாட்களில் மத்திய அரசால் யாருக்கும் குடியுரிமை வழங்க முடியாது. இது தேர்தல் நாடகம்’’ என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இவ்வாறு செய்துள்ளனர்’’ என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன்,‘‘கேரளாவில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago