காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், பாஜகவின் நம்பிக்கை: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி சிறப்பு பேட்டி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், பாஜகவின் நம்பிக்கையாகி உள்ளதாக ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சேஷாத்ரி சாரி தெரிவித்துள்ளார். இவர், ஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ ‘ஆர்கனைஸர்' ஆங்கில வார இதழின்ஆசிரியராக 12 ஆண்டுகள் இருந்தவர்.

புனே பல்கலைக்கழகத்தின் தகைசால் பேராசிரியராகவும், மும்பை பல்கலைக்கழக வேந்தரின் பிரதிநிதியாகவும் உள்ளார். மும்பை வாழ் தமிழரான இவர் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பங்கு குறித்து ‘இந்து தமிழ் திசை’ கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

இதுவரை எந்த அரசியல் கட்சியும் வெளிப்படையாக மக்களவைத் தேர்தலில் தன் வெற்றி மீது வைக்காத நம்பிக்கையை பாஜக வைப்பது சரியா? - இதற்கு நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் இதுவரை நம் நாட்டில் நடத்திய தவறான ஆட்சியே காரணம். சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளவரை காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது. வாரிசுஅரசியல், ஊழல் புகார், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான திட்டங்கள் உள்ளிட்ட புகார்களில் பிரதமர் மோடியின் தலைமையிலான புதிய பாஜக சிக்காமல் இருப்பதே நம்பிக்கையின் அடிப்படை.

எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வகையில் பாஜகவிற்கு அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆதரவு தொடர்வதும் காரணமா? - ஆர்எஸ்எஸ் அரசியல் கட்சி அல்ல. இந்த அமைப்பின் தேசியவாதக் கொள்கைக்கு பாஜக ஒத்துப் போகிறது. இதே கொள்கை கொண்ட இதர கட்சிகளும் ஆர்எஸ்எஸ்-ஐ நாடினால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்படலாம்.

ஒரு காலத்தில் காங்கிரஸிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இருப்பதாகக் கருதப்பட்டதே? - இப்போது கூட காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளிலும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் உள்ளனர். ராமர் கோயில் திறப்புக்கு கிடைத்த ஆதரவிலிருந்து அதை அறியலாம்.

அயோத்தியில் பாபர் மசூதி-ராமர் கோயில் மீது பல ஆண்டுகளாகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. இதில் பாஜக ஆதாயம் காண்பதாகப் புகார் உள்ளதே? - மத்தியிலும், உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. பாஜகஅரசுகள் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனில் அயோத்தி வழக்கு முடிந்திருக்காது. இந்த விவகாரத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் தவறிவிடும் என்ற அச்சத்தில் காங்கிரஸ் குழம்பி நிற்கிறது. ஒருபக்கம் அயோத்தி இடிபாடு கட்டிடத்தின் பூட்டை திறந்ததாக மார்தட்டிக் கொள்கிறது காங்கிரஸ்.மறுபுறம் சேது சமுத்திரம் வழக்கில் ராமாயணம் என்பதே ஒரு கட்டுக்கதை என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. காங்கிரஸின் இத்தகைய குழப்பமான நிலைப்பாட்டினால் மெஜாரிட்டி, மைனாரிட்டி இருவருமே கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர்.

இதுவரை, அமைச்சரவையில் 70 வயதை கடந்தவர்கள் தொடர பாஜக அனுமதிப்பதில்லை. ஆனால், பிரதமர் மோடி மட்டும் மூத்த வயதிலும் தொடர்கிறாரே? - இந்தியா கண்ட பிரதமர்களில் மிகவும் திறமையானவர் நரேந்திர மோடி. ஆகையால், நியாயமான காரணங்களுக்கு விதிவிலக்கு உண்டு.

வட மாநிலங்களின் இந்தி ஆதிக்கக் கட்சி பாஜக எனத் தமிழகத்தில் புகார் உள்ளதே? - இந்த புகார் தவறானது. காசி தமிழ்ச்சங்கமங்கள் மூலமாக தமிழரின் பெருமை வட மாநிலங்களில் எடுத்துரைக்க பிரதமர் மோடி காரணகர்த்தாவாகி இருந்தார். தனது பல உரைகளில்தமிழில் பேசுவதுடன், அம்மொழிக்கு முக்கியத்துவமும் அளிக்கிறார். இதுபோல், பாஜகவின் கொள்கையாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி இருப்பதைக் கண்டு இதர சமூகத்தினரும் ஆதரவளிக்கின்றனர்.

இதற்கு, ஐபிஎஸ் பணியை துறந்த இளைஞர் அண்ணாமலை, பாஜகவின் தலைவரானதும் முக்கிய சான்றாகும். இதுபோல், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளில் புதிதாக வந்த இளைஞர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்து விடுமா? திராவிடக் கட்சியான திமுகவில் உதயநிதியை போல் ஒரு வாரிசாக இருந்தால்தான் கிடைக்கும்.

அண்ணாமலையின் சில செயல்பாடுகள் சர்ச்சையாகி விடுகிறதே? - அண்ணாமலையின் தலைமையில் பாஜக சிறப்பாக வளர்ந்து வருகிறது. இளம் தலைவர் என்பதால் சர்ச்சைகள் வருவதைத் தவிர்க்க முடியாது. திராவிடக் கட்சிகளின் ஊழலுக்குஎதிராகக் குரல் கொடுக்கும் ஒரே எதிர்க்கட்சித் தலைவராக அவர் விளங்குவதால் விரைவில் தேசியத் தலைவராக உயர்ந்தாலும் வியப்பில்லை.

வெறுப்புணர்வு பேச்சால் பிரக்யா, பர்வேஷ் வர்மா உள்ளிட்டோருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜக வெறுப்பு அரசியலை கைவிடுவதாகக் கருதலாமா? - எந்த ஒரு கட்சிக்கும் தேர்தல் என்பது வெற்றிக்கானது. இதில் பொதுமக்கள் விரும்பாதவர்களுக்கு இடமளிக்காத கட்சியே சிறந்தது. ஆகையால், பாஜக வரலாற்றில் வெறுப்பு பேச்சுக்கு என்றுமே இடமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE