தெலுங்கு தேசம், ஜன சேனா, பாஜக கூட்டணி உடன்பாடு: யாருக்கு எத்தனை சீட்? - ஆந்திர அரசியல்

By செய்திப்பிரிவு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் வரும் மக்களவை தேர்தலுடன், அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை தெலுங்கு தேசம், ஜன சேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்ற உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பை ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். “அமராவதியில் பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனா கூட்டணி இடையேயான உடன்படிக்கை எட்டப்பட்டது.

மாநிலத்தை மீட்டெடுக்கும் முயற்சி மற்றும் மாநில மக்களுக்கான பிரகாசமான எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த கூட்டணி அமைத்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த விவரத்தை மூன்று கட்சிகளும் கூட்டாக சேர்த்து அறிவித்துள்ளன.

மக்களவை தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில் பாஜக 6, தெலுங்கு தேசம் 17 மற்றும் ஜன சேனா 2 இடங்களில் போட்டியிட உள்ளது. அதே போல அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் பாஜக 10, தெலுங்கு தேசம் 144, ஜன சேனா 21 இடங்களில் போட்டியிடுகின்றன. இதில் யார் எந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE