அமலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம்: விதிமுறைகள் உடன் அறிவிக்கை வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் அறிவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தச் சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளமும் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2015-க்கு முன்பாக இந்தியா வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் ஆகியோர் தாங்கள் எந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்தோம் என்பதை அறிவிக்க வேண்டும். அதேநேரத்தில், அவர்கள் பயண ஆவணம் எதையும் அதில் இணைக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கக் கூடியவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் வாதங்கள்: இந்தியா மதச்சார்பற்ற நாடு எனும்போது, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது கூடாது. இந்திய அரசியல் சாசனம், மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. ஆனால், இந்த சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது. இது அனைவரையும் சமமாக நடத்தவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கப்பட்டால், அது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருவதாக ஆகிவிடும். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்த சட்டம் என்றால் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தானில் அகமதியாக்களும், மியான்மரில் ரோஹிங்கியாக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை விட்டுவிட்டது ஏன்? இலங்கையில் இன்னல்களை சந்தித்த இலங்கை தமிழர்களை இந்த பட்டியலில் சேர்க்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பின்புலமும் எதிர்ப்பும்: குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து, இந்தச் சட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு இந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், சிஏஏ சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே தயாராகிட்டன. இது தொடர்பான அறிவிக்கையை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடவும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

“சிஏஏ சட்டத்தை அமல்படுத்த தனி இணையதளம் தொடங்கப்படும். அதன் மூலம்தான் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். அதில், எந்த ஆண்டில் இந்தியாவில் (பயண ஆவணம் இல்லாமல்) தஞ்சமடைந்தோம் என்பதை மனுதாரர்கள் குறிப்பிட வேண்டி இருக்கும். இதற்காக எந்த ஆவணமும் கேட்கப்பட மாட்டாது” என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

எதிர்ப்பு ஏன்? - பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிப்பவர்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. குறிப்பாக, இந்த 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

ஆனால், இந்தச் சட்டத்தில்இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019 டிசம்பரில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவியது. இதனால் விதிமுறைகளை உருவாக்கும் பணி தாமதமாகி வந்தது. சிஏஏ சட்டத்தை அமல்படுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரானதா? - மதச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது இந்தத் திருத்தத்தின் நோக்கமாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் திருத்தத்தில் அனைத்து மதச் சிறுபான்மையினருக்கும் அவ்வாறு சலுகை காட்டப்படவில்லை. பாகிஸ்தானில் அஹமதியா மற்றும் ஷியா முஸ்லிம்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

மியான்மரில் ரோகிங்கியா முஸ்லிம்களும் இந்துக்களும் துயரங்களுக்கு ஆளாகிவருகின்றனர். இலங்கையில் தமிழ் முஸ்லிம்களும் இந்துக்களும் இதே துயரத்தை அனுபவித்துவருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஏன் இந்தச் சலுகையை விரிவுபடுத்தவில்லை என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம் நாடுகளிலுள்ள சிறுபான்மையினரைப் பற்றி மட்டுமே இந்தச் சட்டத்திருத்த மசோதா கவனம் கொண்டுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. | விரிவாக வாசிக்க > யார்? என்ன? எப்படி?- குடியுரிமைத் திருத்த மசோதா: கூறுவது என்ன?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்