பாஜக முதல் பட்டியலில் ஒரே முஸ்லிம் வேட்பாளர்... யார் இந்த அப்துல் சலாம்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

By ஷாலினி

மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், 195 பேர் அடங்கிய பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த அப்துல் சலாம் எனும் அந்த வேட்பாளர் குறித்து பார்ப்போம்.

கேரளாவின் மலப்புரம் தொகுதி பாஜக வேட்பாளராக அப்துல் சலாம் அறிவிக்கப்பட்டுள்ளார். கேரளாவின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில், 12 பேர் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மக்களவைத் தொகுதிகளில் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக கவரும் வகையில் புதிய பிரச்சார வியூகத்தை பாஜக கையில் எடுத்து வருகிறது. மலப்புரம் தொகுதியில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் முஸ்லிம்கள் எனக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், பாஜக அரசின் எம்பிக்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்ற நிலை உள்ளது. இந்நிலையில், பாஜக மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள சலாம் மீது கவனம் குவிகிறது.

யார் இந்த அப்துல் சலாம்? - 2019-ஆம் ஆண்டுதான் பாஜகவில் இணைந்திருக்கிறார் அப்துல் சலாம். உயிரியல் அறிவியல் துறையில் 153 ஆராய்ச்சி கட்டுரைகளையும், 15 ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் 13 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கேரளாவின் திரூரைச் சேர்ந்த அப்துல் சலாம் 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை கோழிக்கோடு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியிருக்கிறார்.

அதற்கு முன்பு சலாம் கேரள வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், வேளாண் துறையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சலாம் தனது வாழ்நாள் முழுவதும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்திருக்கிறார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பித்தல் அனுபவத்தையும் கொண்டுள்ளார். 2021 கேரள சட்டசபை தேர்தலில், அவர் 135 நெமோம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தற்போது மலப்புரம் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முகமது பஷீர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் வஃசீப் ஆகியோரை எதிர்த்து தேர்தலில் களமிறங்குகிறார். துணைவேந்தராக இவருடைய பதவிக்காலம் பல சர்ச்சைக்குரிய நகர்வுகளால் கவனம் பெற்றது. குறிப்பாக பல்கலைக்கழக நிலத்தை விற்பது மற்றும் பிளஸ்-டூ தகுதி இல்லாமல் மாணவர்களை பட்டப்படிப்புகளுக்கு சேர்க்க முயற்சித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

கல்வியாளர் டூ அரசியல்வாதி: அப்துல் சலாம் இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், “என்னுடைய வாழ்க்கையில் நான் ஒருபோதும் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று சொன்னதில்லை. ஆனால், 2009-ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி என்னுள் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரின் தொலைநோக்குப் பார்வை, சக்தி வாய்ந்த செயல்பாடுகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.

நான் மனதளவில் 2014-ஆம் ஆண்டே பாஜகவில் சேர்ந்துவிட்டேன். ஆனால், தற்போதைய கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையின் உதவியுடன் அதிகாரப்பூர்வமாக 2019-இல் பாஜகவில் இணைந்தேன்.

பிரதமர் மோடி முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வளர்ச்சிக்காக அதிக நேரத்தையும், நிதியையும் செலவிட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக தவறாக வழிநடத்தப்பட்டு, இருளில் வாழ்ந்து வருகின்றனர். சக்தி வாய்ந்த விளக்குடன் சென்று மோடியின் ஒளியை பிரகாசிக்கச் செய்வதே எனது நோக்கம்.

சவுதி அரேபியாவை விட இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் விரும்பியதைச் செய்ய அவர்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் உள்ளது. அவர்கள் தங்கள் மதத்தை வெளிப்படுத்தவும், விரிவுபடுத்தவும், ஜனநாயக சுதந்திரத்தைப் பெறவும் முடியும்” என்றார்.

கேரள மாநிலம் நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்டது. மலப்புரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பலம் வாய்ந்த கோட்டையாகவே பார்க்கப்படுகின்றது. கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து மாறி மாறி ஆட்சியமைத்து வரும் நிலையில், எப்படியாவது கேரளத்தில் தடம் பதிக்க பாஜக முயன்று வருவது கவனிக்கத்தக்கது.

முந்தைய பகுதி > சுஷ்மாவின் மகள், பாஜக வழக்கறிஞர்... யார் இந்த பன்சூரி ஸ்வராஜ்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE